திருவட்டாறு கோயில்: 1992 முதல் 1995-ம் ஆண்டு வரை.. திருடுபோன கல்தூண்கள்?! - என்ன நடந்தது?

0

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையகமாக பத்மநாபபுரம் அரண்மனை இருந்த சமயத்தில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் சார்பில்தான் மன்னர்கள் நாட்டை ஆண்டதாக வரலாறு உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் தனது தலைநகரத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றிய பிறகு, திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோயில் கட்டப்பட்டது.

அக்கோயில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருவட்டாறு கோயிலில் மூலவர் மஹாவிஷ்ணு படுத்த நிலையில் 22 அடி நீளத்தில் காட்சிதருகிறார். கடுகு சர்க்கரை யோகம் எனப்படும் மூலிகைகளால் ஆன மூலவர் சிலைக்கு அபிஷேகம் செய்வது இல்லை. மேலும் இக்கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் கலைநயம் மிக்க கல்தூண்களும், கல்தூண்களில் நுட்பமான சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தலத்தைச் சுற்றிலும் ஆறு ஓடுவதால், வெள்ளாப்பெருக்கால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த கோயில் சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் 76-வது திருத்தலம் திருவட்டாறு. இக்கோயிலின் மூலவர் மீது தங்க கவசம் சார்த்தப்பட்டிருந்தது.

திருவட்டாறு கோயில் கல் தூண்கள்

மூலவருக்கு சார்த்தப்பட்டிருந்த தங்க கவசத்தை திருடிவிட்டு தகரத்தில் மஞ்சள் பெயிண்ட் பூசி அதை சுவாமிக்கு பொருத்திய சம்பவம் 1992-ம் ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கில் 22 பேருக்கு கடந்த ஆண்டு கோர்ட் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் 1992 முதல் 1995-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட சமயத்தில் திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் கல்தூண்கள் திருடப்பட்டதாக சிலை திருட்டு தடுப்புபிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

Also Read: தென்னிந்தியாவின் வைகுண்டம், 1000 ஆண்டு வரலாறு... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்!

இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் திருவிதாங்கூர் சமஸ்தான மஹாராஜா வழிபட்ட தலம் ஆகும். 7-ம் நூற்றாண்டு அல்லது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொன்மையான கோயிலாகும். இக்கோயிலில் இருந்து 1992 முதல் 1995 வருடத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கலைநயம் மிக்க நான்கு கல் தூண்கள் திருட முயற்சித்து, இரண்டு கல்தூண்கள் மட்டும் திருடி சென்னைக்கு கொண்டுவந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.

திருவட்டாறு கோயில் சிற்பங்கள்

அதன் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்புபிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் 16.12.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவல்குழு தலைவர் சிவகுற்றாலத்திடம் பேசினோம், "கல்தூண்கள் திருடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது. கல்தூண் திருடப்பட்டது என்றால் அந்த மண்டபம் எங்கு உள்ளது. கல் தூண் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து நேரில் ஆய்வு நடத்த உள்ளேன்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/34jn0SH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*