துரைக்கண்ணு மகனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்? - கைது நாடகம்; ஜாமீனில் வந்த 5 பேர்!

0

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்குப் பிறகு அவரது பினாமிகள் என சொல்லப்பட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். துரைக்கண்ணு கொடுத்து வைத்திருந்த பணத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான பணிகளையும் போலீஸார் முன்னெடுத்தனர். இந்நிலையில் 5 பேரும் நிபந்தனை ஜாமினீல் வெளியே வந்துள்ளது தஞ்சாவூர் அ.தி.மு.கவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

துரைக்கண்ணு மகன் அய்யப்பன்

அ.தி.மு.க அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் துரைக்கண்ணு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ராஜகிரிக்கு எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

இதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் துரைக்கண்ணு வகித்த வந்த வேளாண்மை துறை ரீதியிலாக வர வேண்டிய கமிஷன் பணம் மற்றும் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக ஆட்சி மேலிடம் அவரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் ஆகியவை துரைக்கண்ணுவிடம் இருந்ததாகக் கூறப்பட்டது.

பெரியவன் முருகன்

திடீரென அவர் மறைந்ததால், அந்தப் பணம் குறித்து துரைக்கண்ணுவின் இளைய மகன் அய்யப்பன் மற்றும் அவரது மருமகன் ஆகியோரிடம் ஆட்சி மேலிடம் கேட்டது. ஆனால், `பணம் குறித்த எந்தத் தகவலையும் என்னிடம் தெரிவிக்க வில்லை’ என அய்யப்பன் கைவிரித்து விட்டார். இதனால் முதல்வர் தரப்பு கடும் கோபமடைந்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், மேலிட உத்தரவின் பேரில் போலீஸார் அய்யப்பனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து துரைக்கண்ணு மற்றும் அய்யப்பனிடம் நெருக்கமாக இருந்த பிரபல ரெளடி பெரியவன் முருகன், பாலகுரு, வேதா செல்வம், அய்யர் என்கிற சக்திவேல், அ.ம.மு.க பிரமுகரான வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆகிய 5 பேரை ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், போலீஸாரை மிரட்டியதாகவும் கைது செய்தனர்.

பாலகுரு

அவர்கள் ஐந்து பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. இதில் பெரியவன் முருகன், வேதா செல்வம் ஆகியோர் துரைக்கண்ணுவின் பினாமிகளாக இருந்ததாகச் சொல்கிறார்கள். அத்துடன் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கிக் குவிப்பதற்கும் பல்வேறு உதவிகளை வெளியே தெரியாமல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

துரைக்கண்ணு, ஆட்சி மேலிடம் தன்னிடம் கொடுத்த பணத்தை இவர்கள் வசம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்னதாகவும், அந்தப் பணத்தை கைப்பற்றவுமே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், இதனை அய்யப்பன் முற்றிலுமாக மறுத்தார்.

Also Read: தஞ்சை: துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது; 5 பேர் பினாமியா? - பிரமிக்கவைக்கும் பின்னணி!

போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பும், `டெல்டா மாவட்டத்தில் ரெளடிகள் அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவே கைது நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன’ என விளக்கமளித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு வழக்கறிஞர் சுரேஷ்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து பெரியவன் முருகன் உள்ளிட்ட நான்கு பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அய்யப்பனிடமிருந்த பணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் மேற்கொண்டார். இதில் முக்கால்வாசி பணத்தைக் கைப்பற்றி விட்டனர்.

அய்யர் என்கிற சக்திவேல்

அதன்பிறகே மேலிடத்தின் அழுத்தம் காரணமாக ஜாமீனில் வெளியே விட்டதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. இது குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர்,``அய்யப்பன், பெரியவன் முருகனிடம் நெருக்கமாக இருந்து வந்தார். `வேளாண்மைத் துறை ரீதியிலான பணி நியமனம், டிரான்ஸ்பர் என எந்த விவகாரமாக இருந்தாலும் அய்யப்பனை பாருங்கன்’னு துரைக்கண்ணு சொல்லிடுவார்.

அய்யப்பன்தான் அனைத்தையும் கவனிச்சுகிட்டார். அதேநேரத்தில் துரைக்கண்ணு கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். இந்த 5 பேரும் அதற்கு உதவியாக இருந்ததுடன், பினாமிகளாகவும் இருந்தனர்.

வேதா செல்வம்

இந்நிலையில், தேர்தல் செலவிவுக்காக கட்சித் தலைமை கொடுத்த ஒரு பெரும் தொகையும், துறைரீதியிலாக வர வேண்டிய கமிஷன் பணம் என சுமார் ரூ.300 கோடி பணம் துரைக்கண்ணு வசமிருந்தது. இதனை அவர், தனக்கு நெருக்கமான நபர்களான பெரியவன் முருகன், வேதா செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் சிலரிடமும் கொடுத்து வைத்திருந்தார். இந்த விவகாரங்கள் அனைத்தும் அய்யப்பனுக்குத் தெரியும்.

இதையடுத்து துரைக்கண்ணு மறைந்துவிட அய்யப்பனிடம் பணத்தைக் கேட்டனர். அவர், எனக்கு தெரியாது என ஒரேயடியாக கைவிரிக்க கைது படலத்தைத் தொடங்கியது ஆட்சி மேலிடம். பணத்தைத் தரவில்லை என்றால் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என கூற அய்யப்பன் மீதான பிடியும் இறுகியது.

சுரேஷ்குமார்

பெரியவன் முருகன் உள்ளிட்டவர்களும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவித்தனர். அதன் பிறகு அய்யப்பன் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்தார். இதுவரை முக்கால்வாசி பணம் திரும்பப்பெறப்பட்டுவிட்டது. மீதி பணத்தையும் `நீங்கதான் பாபநாசம் தொகுதி வேட்பாளர்’ எனக் கூறியே கைப்பற்றப்பட்டு வருகிறது.

பணம் கைக்கு வந்த பிறகு 5 பேர் மீதான பிடி தளர்ந்தது. இதனைக் காரணமாக வைத்தே சுரேஷ்குமார் தவிர்த்து பெரியவன் முருகன் உள்ளிட்ட நான்கு பேரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அதற்கான ஃபைலை உயரதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் காத்திருந்தனர்.

Also Read: தஞ்சை: `வரவு, செலவுக் கணக்கு; கைவிரித்த மகன்?’ - துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது பின்னணி

இதற்கிடையில் ஒரு வாரத்துக்கு முன்பே சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். அதன் பிறகு மற்ற நான்கு பேரையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஃபைல் கையெழுத்து ஆகாமலேயே கிடப்பில் போடப்பட்டது. போலீஸார் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு கட்டத்துக்கு மேல் நகரவில்லை.

மேலிடத்திற்கு நெருக்கமான சிலர் மற்றும் அமைச்சர் ஒருவரும் இவர்களை ஜாமீனில் வெளியே விடுவதற்காக முயற்சி செய்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் மற்ற நான்கு நபர்களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். பணத்தைக் கைப்பற்றவே இந்த கைது நாடகம் நடப்பதாக அப்போது பேசப்பட்டது. பணம் கைக்கு வந்த பிறகு அவர்களை விட்டு விட்டதால் தற்போது அது உண்மையாகிவிட்டது.

துரைக்கண்ணு - அய்யப்பன்

ஆனாலும், பெரியவன் முருகன் உள்ளிட்ட நான்கு பேரின் செயல்களை பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் கண்காணித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும், சிலர் வழக்கு பதியும்போதே பணம் கிடைத்தபிறகு விட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் சரியான பிரிவுகளில் வழக்கு பதியவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதனால் அய்யப்பன் மெல்ல சகஜநிலைக்கு மாறிக்கொண்டிருப்பதுடன் தொகுதியைக் கைப்பற்றும் ஆசையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவரிடம் இருக்கும் மீதிப் பணத்தை கைப்பற்றியே பிறகே என்ன நடக்கும் என்பது தெரியும்’’ என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oHfpFh
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*