கரூர்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை! - 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

0

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே எலெக்ட்ரீசியனை பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில், 6 பேர் கொண்ட கும்பம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார்

Also Read: கரூர்: `மகள்களின் படிப்புக்குப் பணம் புரட்ட முடியவில்லை' - விபரீத முடிவெடுத்த தந்தை

திருச்சி மாவட்டம், தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 27). எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவருக்கு திருமணமாகி, புனிதவள்ளி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில், ரஞ்சித்குமார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2 மாதங்களாக அறை எடுத்து தங்கி, எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். விடுமுறையில் மட்டும் சொந்த ஊருக்குச் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று தனது இருசக்கர வாகனத்தில், மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்து டீக்குடித்துவிட்டு, அறைக்கு மீண்டும் புறப்பட தயாராகியுள்ளார். அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பதறிப்போன அவர் சுதாரிப்பதற்குள், கண் இமைக்கும் நேரத்தில், அந்த கும்பல் அரிவாளால் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதில், படுகாயமடைந்த ரஞ்சித்குமார் உயிருக்கு போராடினார்.

Also Read: சென்னை: அக்காவைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை! - சிக்கியது எப்படி?

இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு வந்து, ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலாயுதம்பாளையம்

இதையடுத்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீஸார், எலெக்ட்ரீசியன் ரஞ்சித்குமாரை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு காரணம், பெண் விவகாரமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் துள்ளத்துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3r3yaVv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*