குமரி: மதுபோதையில் சிறுவர்கள்! - சாலையோரம் தூங்கியவரை சலனமின்றி எரித்துக் கொன்ற கொடூரம்

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(60). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக வீட்டுக்குச் செல்லாத சந்திரன், இருளப்பபுரம் பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் தூங்குவது வழக்கம். பகல் நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நேற்று அதிகாலையில் சந்திரன் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலின்பேரில் கோட்டாறு போலீஸார் அந்த பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட சந்திரன்

போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கொலையை செய்தது ஐந்து சிறுவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர்கடையில் மதுரையைச் சேர்ந்த 5 சிறுவர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று இரவு சிறுவனின் காதலி செல்போனில் பேசாமல் இருந்த காரணத்தால் விரக்தியில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளான்.

போதை தலைக்கேறிய நிலையில், வழி நெடுகிலும் பல்வேறு கார்கள் மற்றும் கடைகள் மீதும் கல்லெறிந்தபடியே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இருளப்பபுரம் பகுதியில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த சந்திரனை பார்த்திருக்கிறார்கள். அவரை தட்டி எழுப்பி தீப்பெட்டி இருக்கிறதா என கேட்டுள்ளனர். அவர் தீப்பெட்டி இல்லை என்றும் லைட்டர் தான் இருக்கிறது என்றும் சந்திரன் கூறியிருக்கிறார். சந்திரனிடம் இருந்து சிறுவர்கள் லைட்டரை வாங்கியுள்ளார்கள். சந்திரன் மீண்டும் கண்ணயர்ந்த சமயத்தில், அவரது வேட்டியில் தீயை பற்றவைத்துள்ளனர் சிறுவர்கள். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் சந்திரன் துடிதுடித்து இறந்துள்ளார்" என்றனர்.

எரிந்த நிலையில் தொழிலாளி

சந்திரன் உடலில் தீ வைத்த்த சிறுவர்கள் எந்தவித அச்சமோ, சலனமோ இல்லாமல் அங்கிருந்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய கோட்டாறு போலீஸார் மதுரையைச் சேர்ந்த 5 சிறுவர்களையும் கைது செய்தனர். அதிகமான கடைகளும், குடியிருப்புக்களும் நிறைந்த இருளப்பபுரம் பகுதியில் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mDB4gc
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*