வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், புகாரளிக்க வரும் நபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் திங்கட்கிழமையின்போது மட்டும் போலீஸார் அனைவரையும் சோதனை செய்கிறார்கள். மற்ற நாட்களில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் அருகே அமர்ந்துகொள்கிறார்கள். சோதனை எதுவும் செய்வதில்லை என்ற குற்றசாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. காவல்துறையினரின் இந்த அலட்சியத்தால், கலெக்டர் அலுவலகத்துக்குள் தற்கொலை முயற்சி சம்பவம் அடிக்கடி நடக்கிறது. பலமுறை பாடம் கற்பித்தும் காவல்துறையினர் கவனக்குறைவாகவே செயல்பட்டுவருவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள்.
இந்த நிலையில், இன்று மதியம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கே.வி.குப்பத்தைச் சேர்ந்த தண்டபாணி (46) என்ற ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணை நிரப்பிய வாட்டர் கேனுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த போலீஸார் சோதனை செய்யாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி மண்ணெண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலக போர்டிகோ பகுதிக்குச் சென்று தன்மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றினர். அதன்பின்னரே கண்காணிப்புப் பணியிலிருந்த போலீஸார் ஓடி வந்து ஆட்டோ ஓட்டுநர் மீது தண்ணீரை ஊற்றி சத்துவாச்சாரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரிடம் ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், ‘‘எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு, ஒரு பையன் இருக்கிறாங்க. ஆகஸ்ட் மாசம் சண்டை வழக்குல என் மச்சான் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். அங்கிருந்த எஸ்.ஐ ஒருத்தர் என் மச்சானுக்கு வேண்டப்பட்டவர்.
ரத்தக் காயத்தோட இருந்த என்னுடைய புகார் மனுவைப் பெற மறுத்த அந்த எஸ்.ஐ பதிலுக்கு என்னையே மிரட்டுறாரு. ‘கஞ்சா கேஸ் போட்டு உள்ளத் தள்ளிடுவேன்’னு ஸ்டேஷன்ல இருந்து என்னைத் துரத்திவிட்டிட்டாரு. அப்போதிலிருந்து என்னை ஆட்டோ ஓட்ட விடாம ‘பொய் கேஸ் போட்டிருவேன்’னு தொடர்ந்து மிரட்டுறாரு. அந்த எஸ்.ஐ மேல நடவடிக்கை எடுக்கலைன்னா.. சத்தியமா கொளுத்திகிட்டு செத்திடுவேன்’’ என்றார்.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணியை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3r0RWAZ
via
