வேலூர்: இந்தியன் ரெட்கிராஸில் முறைகேடு; நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு! - கலெக்டர் அதிரடி

0

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் (இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி) கணக்குத் தணிக்கை ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செஞ்சிலுவைச் சங்கத் தலைவரும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில், பெருமளவிலான நிதி முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆவணங்களைத் தணிக்கைக்கு உட்படுத்தியபோது, கணக்குகள் சரியாகப் பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது.

இந்தியன் ரெட்கிராஸ் அலுவலகம்

இதையடுத்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளைச் செயலாளராக உள்ள இந்தர்நாத் உட்பட நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள 14 உறுப்பினர்களிடமும் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டார். அவர்கள் அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அதிருப்தியடைந்த ஆட்சியர் சண்முகசுந்தரம் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகக் குழுவைக் கூண்டோடு கலைத்து அதிரடியாக உத்தரவுப் பிறப்பித்தார்.

‘‘விரைவில் புதிய நிர்வாகக் குழு உருவாக்கப்படும்’’ என்று தெரிவித்த மாவட்ட ஆட்சியர், தற்போதுள்ள நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளை முடக்கவும் சப்-கலெக்டர் தலைமையிலான அலுவலர்களுக்கு ஆணையிட்டார். இதையடுத்து, சப்-கலெக்டர் கணேஷ் தலைமையில் தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மாவட்ட அலுவலகத்துக்குச் சென்று முழுமையாக சோதனை செய்தனர்.

ரெட்கிராஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பின்னர், அந்த அலுவலக கட்டடத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தனர். செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சொந்தமான காரையும் பறிமுதல் செய்து சாவியையும் கைப்பற்றினர். தொடர்ந்து, சத்துவாச்சாரியில் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் அருகே செயல்பட்டுவரும் செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பொய்கையில் செயல்பட்டுவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதியோர் காப்பகத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த நடவடிக்கையின்போது, முறைகேடுகள் நடந்திருப்பதற்கான கோப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கலைக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரிடம், சப்-கலெக்டர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rf5Cbp
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*