டேங்கர் லாரியில் ரசாயன கழிவுநீர்! - ராணிப்பேட்டை தொழிற்சாலை மீது அதிரடி நடவடிக்கை

0

ராணிப்பேட்டை பகுதியிலுள்ள பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும், நீர்நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டை நகரமே உருக்குலைந்துவருகிறது. ‘‘சிப்காட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய நிறுவனங்கள்தான் சூழல் மாசுபாட்டுக்கு மிக முக்கியக் காரணம். அந்த நிறுவனங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை வேண்டும்’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ராணிப்பேட்டை மக்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

ரசாயன கழிவுநீருடன் லாரி

இந்த நிலையில், ‘‘சிப்காட்டில் உள்ள மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து மறுசுழற்சி செய்யப்படாத மிகவும் அபாயகரமான மருந்து கழிவுகளை சட்டவிரோதமாக லாரி மூலம் ஆந்திராவுக்குக் கொண்டுச்செல்கிறார்கள். அந்த கழிவுநீரை அங்குள்ள புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகள், காடு மற்றும் மலைப்பகுதிகளில் திறந்துவிடுகிறார்கள்’’ என்று பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின் சட்டவிரோத செயலை ரகசியமாக கண்காணித்துவந்தார். நேற்று இரவு மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து 21 ஆயிரம் லிட்டர் ரசாயன கழிவுநீரை ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டேங்கர் லாரியில் ஏற்றிச்செல்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த்துறையினர் மூலம் அந்த லாரியை சப்-கலெக்டர் இளம்பகவத் மடக்கிப் பிடித்துள்ளார். ராணிப்பேட்டை-பொன்னை சாலையில் உள்ள முகுந்தராயபுரம் லாலா ஏரி என்றப் பகுதியில் லாரி பிடிபட்டது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட நிலையில் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லஞ்சம் கொடுத்து லாரியை மீட்பதற்காக வந்த லாரி உரிமையாளர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் 8 லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் ரசாயன கழிவுநீர் மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மல்லாடி டிரக்ஸ் தொழிற்சாலை

சித்தூரிலிருந்து கல்லாறு செல்லும் பாதையில் உள்ள தடுக்கு என்றப் பகுதியில் இந்த கழிவுநீரைத் திறந்துவிடுவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. நிறுவனம் தரப்பில், ‘‘அந்த கழிவுநீர் ஆந்திராவில் உள்ள சிமெண்ட் தயாரிக்கும் கம்பெனிக்கும், தெலங்கானாவில் உள்ள ஓர் கம்பெனிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், ‘‘நிறுவனம் கூறியதில் துளியளவும் உண்மையில்லை’’ என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின் மின் இணைப்பை சப்-கலெக்டர் இளம்பகவத் துண்டித்தார். இந்த நடவடிக்கையின்மூலம் அந்த நிறுவனத்தின் உற்பத்தி தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ricfdh
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*