வேலூர்: தனியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் மோசடி! - பா.ம.க பிரமுகர் மீது குவியும் புகார்கள்

0

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் சஞ்சய்குப்தா, தொழில் அதிபர். இவரது மகன் ஹரிஷ்குப்தா (21). இவர், வேலூர் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உயர்கல்விப் பயில விரும்பினார். அதற்காக 2017-ம் ஆண்டு விண்ணப்பித்தபோது, வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ஆந்திர மாநிலம், அமராவதியில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கான அட்மிஷன் சீட் கிடைத்துள்ளது. அமராவதியில் கிடைத்த சீட்டை வேலூர் வி.ஐ.டி-க்கு மாற்றுவதற்காக தரகர்களைச் சந்திக்க முடிவுசெய்தார் தொழில் அதிபர் சஞ்சய்குப்தா. அதற்காக, வேலூரில் உள்ள தனது நண்பர் ரமேஷ் மூலமாக அரியூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரைச் சந்தித்துள்ளார்.

வி.ஐ.டி பல்கலைக்கழகம்

அந்த நபர், வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் நகரச்செயலாளர் வெங்கடேசன் (49) என்பவரை அறிமுகம் செய்துவைத்துள்ளார். பா.ம.க பிரமுகர் வெங்கடேசன், ‘‘தனக்கு வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு இருக்கிறது. கண்டிப்பாக அட்மிஷனை மாற்றித் தருகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார். தனது பேச்சை நம்பிய தொழில் அதிபர் சஞ்சய்குப்தாவிடமிருந்து பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் 5 லட்சம் ரூபாயை கமிஷன் தொகையாகப் பெற்றுள்ளார். பணத்தை வாங்கியப் பிறகு வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ‘சீட்’ வாங்கித் தராமல் காலம் கடத்திய பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதேபோல், திருப்பத்தூர் கௌதமபேட்டையைச் சேர்ந்த ஆனந்தி (54) என்ற ஆசிரியையிடமும் அவரது மகளுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாயை 2015-ம் ஆண்டு பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வேலூர் எஸ்.பி செல்வகுமாரிடம் பணத்தை இழந்த இருத்தரப்பினரும் தனித்தனி புகார்களை கொடுத்தனர். புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இலக்குவன், கவிதா மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கைதுசெய்யப்பட்ட வெங்கடேசன்

பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் நிரூபணமானது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேலூர் தொரப்பாடியில் பதுங்கியிருந்த வெங்கடேசனை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பா.ம.க பிரமுகர் வெங்கடேசனை சிறையிலடைத்தப் பின்னர் மேலும் இரண்டு மோசடி புகார்கள் வந்தன. அதனையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட குற்றப்பிரிவு போலீஸார், ‘‘பா.ம.க பிரமுகர் வெங்கடேசனிடம் பணத்தை இழந்த நபர்கள் வேறு யாரேனும் இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகாரளிக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பா.ம.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெங்கடேசனை அக்கட்சித் தலைமை நீக்கியிருக்கிறது. இதுதொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலின்பேரில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3paTGFJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*