புதுக்கோட்டை: `பதிவு செஞ்சு 24 வருஷமாச்சு; வேலை கிடைக்கலை!’ - வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே பேனர்

0

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் சேர்ந்து நூதன பேனர் ஒன்றை வைத்திருந்தனர். அந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகப் பதிவு செய்தும் இன்னும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. குறிப்பாக வேலைக்கான எந்த அறிவிப்பும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வரவில்லை.

ஆனந்தராஜ்

இதுபற்றி அறிந்து விரக்தியடைந்த அவரின் நண்பர்கள் பேனரை வைத்தனர். பேனரில், `வெற்றிகரமாக 24-ம் ஆண்டு பதிவு மூப்பை பதிவுசெய்த, எங்கள் இனிய நண்பர் கே.ஆனந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பின்குறிப்பு; நலம் விசாரித்துக் கூட கடிதம் வந்ததில்லை, இப்படிக்கு; வேலை இல்லா இளைஞர்கள்’ என்று பதிவு எண், செல்போன் எண்ணுடன் பிளக்ஸ் பேனர் வைத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தையே அதிரவைத்திருக்கின்றனர்.

Also Read: 2K kids: வேலை, பிரேக், ஓவர்டைம்... ‘தறி’ துர்காவின் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுபவங்கள்!

இதுகுறித்து ஆனந்தராஜிடம் பேசினோம். ``புதுக்கோட்டையில் தான் இருக்கோம். பி.எட் முடிச்சிருக்கேன். 1997-ல் பத்தாம் வகுப்பு, 1999-ல் பிளஸ்2 முடிச்சு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிஞ்சேன். அதன்பிறகு பி.எட் முடிச்சிட்டு உடனே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செஞ்சேன். அரசு ஓட்டுநர் வேலையாவது கிடைக்குமா என்ற ஆசையில் 2017-ல் ஹெவி லைசன்ஸ் வாங்கிட்டு அதையும் பதிவு செய்தேன். கிட்டத்தட்ட 24 வருஷமாச்சு. எது முடிச்சாலும் கொஞ்சம் கூட தாமதிக்காம உடனே வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சிருவேன். நண்பர்கள்கூட கேலி, கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் கண்டுக்காமல் பதிஞ்சிருவேன். ஆனா, அதிகாரிங்ககிட்ட இருந்து இதுவரையிலும் எந்த அழைப்பும் வரலை.

பேனர்

இரண்டு மூணு தடவை நேரடியாக அதிகாரிகளைப் பார்த்து மனுக் கொடுத்தும் வேலைக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கலை. `வேலை வந்தா சொல்றோம்’னு சொல்லி அனுப்பிருவாங்க. அரசு வேலையை எதிர்பார்த்து எதிர்பார்த்து வருஷம்தான் ஓடிப்போச்சு. முன்னேற்றம் ஏதும் ஏற்படலை. இப்போ ஹெவி போட்டதுக்கு அப்புறம், ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவரா இருக்கேன். இதுபத்தி நண்பர்கள்கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தேன். அப்படியே அத பேனராக வச்சிட்டாங்க. பேனர் வைத்த அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளே அங்கிருந்து யாரோ அகற்றிவிட்டனர்.

என்ன மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்காங்க. எனக்கும் வேலை கொடுக்கணும். அவங்களுக்கும் வேலை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tWN3KF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*