`5 பெரும் பணக்காரர்களுக்காக மட்டும்தான் மோடி அரசை நடத்துகிறார்!’ புதுச்சேரியில் சீறிய ராகுல் காந்தி

0

புதுச்சேரியில் 2021 பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, ``உலகின் பல நாடுகளில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் இருந்துவரும் சூழலில், இந்தியாவில் மட்டும்தான் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு பின்னணிகள், வரலாறுகள் உள்ள ஒரு தேசமாக நம் தேசம் நிமிர்ந்து நிற்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு மொழியை எவ்வளவு பேர் பேசுகிறார்கள் என்று யோசிப்பதில்லை. ஒரு மதத்தில் இருக்கிறார்கள், ஒரு பண்பாட்டில் எத்தனை பேர் வாழ்கிறார்கள், ஒரு கலாசாரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையைப் பார்ப்பதில்லை. புதுச்சேரி ஒரு சிறிய மாநிலமாக இருக்கலாம். ஆனாலும், இந்தியாவில் இருக்கும் பெரிய மாநிலங்களுக்கு எவ்வளவும் முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே முக்கியத்துவம் புதுச்சேரிக்கும் இருக்கிறது.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி

புதுச்சேரி மக்கள் வாக்களிப்பின் மூலம் கொடுத்த தேர்தல் வெற்றியை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி அவமதித்தார். அவரைப் பொறுத்தவரை ஒரே விஷயம்தான். அவருக்கு முக்கியம். அவர் இந்த தேசத்தின் பிரதமராக இருக்க வேண்டும். துணைநிலை ஆளுநர் என்பவர் ஒரு அரசியல் சாசன சட்ட அமைப்பு. மற்ற ஜனநாயக அமைப்புகளை சேதப்படுத்தி அழிப்பது போல துணைநிலை ஆளுநர் என்ற அமைப்பையும் அவர் அழித்தொழித்தார். இன்றைக்கு இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரும் நீதித்துறையில் முறையான நீதியைப் பெற முடியவில்லை. தனக்கு என்ன நடக்கும் என்ற பயத்திலேயே மக்கள் பேசப் பயப்படுகிறார்கள். செய்தியாளர்கள், தங்கள் உயிருக்கு அஞ்சுகிறார்கள். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அரசின் சட்டங்கள் எந்த விவாதங்களுமின்றி ஆளும் கட்சியால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் போன்ற மக்கள் பிரநிதிகள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மோடி, தன்னை இந்நாட்டின் பிரதமராக நினைக்கவில்லை. நாட்டின் சக்கரவர்த்தியாக நினைக்கிறார். புதுச்சேரி மாநிலத்துக்கு தர வேண்டிய நிதி ஆதாரத்தை அவர் தர வேண்டும். அவர் புதுச்சேரி மக்கள் எண்ணத்தை மதிக்க வேண்டும். கடந்த முறை நீங்கள் வாக்களித்ததை அவமதித்த இந்த பிரதமர் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்களின் பண்பாட்டை, வரலாற்றை, கடந்த காலத்தை அவர் அவமதித்தார். உங்கள் கடந்தகாலத்தை அவமதித்தவர், நிச்சயமாக எதிர்காலத்தையும் அவமதிப்பார்.

மோடி

உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இந்த மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக இருந்தவர் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவரா? புதுச்சேரியின் பன்பாட்டையும் கலாசாரத்தையும் உணர்ந்தவரா? எந்த அடிப்படையில் இந்த அரசாங்கத்தை அவர் நடத்துகிறார்? புதுச்சேரி மாநிலத்துக்கான உரிமைகளையும், திட்டங்களையும் முடிவு செய்யக் கூடிய அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? இதைச் செய்வதற்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? டெல்லியில் அவர்கள் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் என்பதாலா? தங்களிடம் சி.பி.ஐ இருக்கிறது என்பதாலா? புலனாய்வுத் துறை தங்களிடம் இருக்கிறது என்பதாலா? ஒரு நாளும் ஒரு நிமிடம்கூட நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். அவர்கள் மீண்டும் வந்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய அவமானம், அவமதிப்பு.

புதுச்சேரிக்கு என்ன அநீதியை செய்கிறார்களோ அதையே இந்தியா முழுமைக்கும் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது என்கின்றனர். வங்காளத்தில் வங்க மொழியை பேசக் கூடாது என்கின்றனர். பஞ்சாபிகளைப் பார்த்து நீங்கள் அனைவரும் தீவிரவாதிககள் என்கின்றனர். யாராவது அரசை விமர்சித்தால் அவர்களை தேச விரோதி என்றும் தீவிரவாதிகள் என்றும் சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்று சொல்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்தியா என்பதற்கு ஒரே ஒரு பொருள், ஒரே ஒரு தத்துவம்தான். நரேந்திர மோடி எதை கற்பனை செய்கிறாரோ அதுதான் இந்தியா என்று வாதிடுகிறார்கள். மோடி மனதில் என்ன கருத்து உதிக்கிறதோ அதைத்தான் நாடு முழுவதும் தங்கள் சொந்தக் கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவர் என்ன உடையை உடுத்துகிறாரோ அந்த உடையைத்தான் இந்தியா முழுவதும் உடுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அவர் எதை சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத்தான் இந்தியாவில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்.

ராகுல் காந்தி

மான் கி பாத் நிகழ்ச்சியில் அவர் எதை பேசுகிறாரோ அதை அப்படியே நாட்டு மக்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் நினைக்கிறார். கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் தேசத்திலிருக்கும் பணக்காரர்களுக்கு உதவி செய்வதற்குத் தானே தவிர, மக்களுக்காக அல்ல. இந்த நாட்டில் நிறைய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி 5 முதல் 6 பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த அரசாங்கத்தை நடத்துகிறார். அந்த பணக்கார்கள் எதை விரும்புகிறார்களோ அதை அவர்களுக்கு அளிப்பார். அவர்கள்தான் இந்த நாட்டின் ஊடகங்களை கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் இந்த நாட்டின் ஊடகங்கள் சொல்லும். மோடி எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உங்களில் யாராவது ஒருவர் பயனடைந்தீர்களா என்று எனக்கு சொல்லுங்கள். எத்தனை பேர் தங்களின் பணத்தை வங்கிகளில் போட்டார்கள்.

அந்தப் பணம் எங்கே போனது? நீங்கள் போட்ட பணம் அந்த பணக்காரர்களுக்குத்தான் போனது. லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அந்தப் பணக்காரர்களுக்கு அவர் வங்கிக் கடனாக கொடுத்தார். இந்நாட்டின் ஜி.எஸ்.டி சட்டம் உங்களுக்கு உதவி செய்ததா? அது அந்த 5 பணக்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்தது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவுடன் அதை எதிர்ப்பதற்காக ஒரு புது யுக்தி இருக்கிறது என்று பிரதமர் சொன்னார். இந்த 21-ம் நூற்றாண்டில் ஒரு பெரிய நோய் தொற்றை விரட்ட உங்கள் கைகளில் இருக்கும் தட்டுக்களை தட்டுங்கள் என்று சொன்ன புத்திசாலிதான் நமது பிரதமர். நீங்கள் தட்டுக்களை தட்டிக் கொண்டிருங்கள். ஆனால் உங்கள் பணம் மட்டும் அந்தப் பணக்காரர்களுக்குப் போய்விடும்.

Also Read: `அறியாமையைவிட ஆபத்தானது ஆணவம்!’ - மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி #corona

வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளை சித்ரவதை செய்கிறார். கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தை பறித்து சில பணக்காரர்களிடம் கொடுப்பதுதான் 3 வேளாண் சட்டங்களின் நோக்கம். இந்த சட்டம் அமலுக்கு வரும்போது விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனத்தினர் தெருவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை. ஏழை மக்கள் உணவுக்கு, உணவுப்பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது. இதுதான் எதிர்காலத்தில் நடக்கும். உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்த ஆளுநர் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் எதிர்காலத்தை யாரும் களவு செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3dosLDV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*