மாசிமகத் திருவிழா கும்பகோணம் மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் நீராடல்... பக்தர்கள் உற்சாகம்!

0

கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மகாமகக் குளத்தில் இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக புனித நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தடையை மீறி அதிகாலை முதல் மாலைவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மகா மகக் குளக்கரையில்

ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக பெரு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தென்னக்கத்து கும்பமேளா எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த பிப்.17 தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்துநாள் உற்சவம் நடைபெற்றது.

விழாவின் 5-ம் நாளில் ஓலைச்சப்பரமும், 9-ம் நாள் விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.மீதமுள்ள பாணபுரிஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏகதினம் உற்சவமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயில்களிலிருந்து சுவாமி மற்றும் அம்பாள் உற்சவர்கள், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு ஊர்வலமாக ரிஷப வாகனங்களில் வந்து மகா மகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

தேரோட்டம்

பின்னர் அந்தந்தக் கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடினர். அப்போது சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதணை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மகாமகக் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று தஞ்சாவூர் எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் மகாமககுளத்தினைப் பார்வையிட்டு பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

மாசிமகத் திருவிழா

அப்போது கொரானா பரவலைத் தடுப்பதற்காகக் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதியில்லை எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லை என்றால் குளத்தின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து நீராடுவோம் என இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா பிரிவின் மாநில செயலாளர் பாலா தெரிவித்தார். மேலும் புனித நீராடல் தடைக்கு பக்தர்கள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மாசி மக விழாவில் வழக்கம்போல் பகதர்கள் புனித நீராடினர். போலீஸார் இதற்கு எந்த தடையும் தெரிவிக்கவில்லை. பக்தர்களையும் தடுக்கவில்லை. நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தடையை மீறி புனித நீராடினர். இதே போல் இன்று காலை சக்கரபாணி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மகா மக குளம்

சாரங்கபாணி கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு 5 நாள்கள் கோயிலுக்குள்ளே சுவாமி புறப்பாடு நடைபெற்ற நிலையில் இறுதி நாளான மாசி மகத்தன்று, பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் 'சாரங்கபாணி' என மெய் சிலிர்க்க கோஷமிட்டு வேண்டிக் கொண்டனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3r1AZ98
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*