மகனைச் சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! - வேலூர் அதிர்ச்சி

0

வேலூரை அடுத்துள்ள அடுக்கம்பாறை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற இவர், இரவு நேரக் காவலாளியாக வேலை செய்துவந்தார். சுப்பிரமணிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிலிருந்தவர்களிடம் தகராறு செய்துவந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட வினோத்

நேற்று இரவும் மதுபோதையில் மகளிடம் சண்டைப்பிடித்த சுப்பிரமணியை இளைய மகன் வினோத் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகனுடன் மோதலில் ஈடுபட்டார். மோதல் முற்றிய நிலையில், வீட்டில் வைத்திருந்த நீளமான இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துவந்து மகன் என்றும் பாராமல் சுட்டுள்ளார். வலதுபக்க மார்பில் குண்டு துளைத்ததில் வினோத் சுருண்டு விழுந்தார்.

Also Read: வேலூர்: காரில் துப்பாக்கி, கத்தி, வாள்... முதல்வர் கூட்டத்துக்குச் செல்லும் திட்டமா? - நடந்தது என்ன?

தன் கண் முன்னாலேயே மகன் துடிதுடித்து இறப்பதைப் பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம்பிடித்தார் சுப்பிரமணி. துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்துவந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுப்பிரமணி

மேலும், வழக்கு பதிந்து அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த தந்தை சுப்பிரமணியை இரவோடு இரவாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் மகனைச் சுட்டுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இருந்தபோதும், போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். பெற்ற மகனையே துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கிய தந்தையின் கொடூரச் செயல், அடுக்கம்பாறை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2ZuvXFH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*