`ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா!’ - என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?

0

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களைக் கொண்டது புதுச்சேரி யூனியன் பிரதேசம். புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டிவரும் பா.ஜ.க, அதற்காக எதிர் முகாமில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு வலைவிரித்தது. அதன்படி தனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்ற அதிருப்தியில் இருந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை இழுந்தது பா.ஜ.க. ஆனால் அவர் போனஸாக உசுடு தொகுதியின் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானையும் அழைத்துச் சென்றார். இருவரும் தங்ளது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து பாஜ.க-வில் இணைந்தனர்.

ஜான்குமார் எம்.எல்.ஏ ராஜிநாமா

அதேபோல ஆந்திர மாநிலத்தை ஒட்டியிருக்கும் ஏனாம் பிராந்தியத்தின் எம்.எல்.ஏவான மல்லாடி கிருஷ்ணாராவ் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். புதுவை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஏனாமில் எம்.எல்.ஏவாக தேர்வாகி வருகிறார். ஐந்து முறை எம்எல்ஏவாக பணியாற்றினார். 25 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக பணியாற்றியதற்கான வெள்ளிவிழா நிகழ்வில் பேசிய அவர், மீண்டும் தனது சொந்த தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் தொடர்ந்து மோதலும் நிலவி வந்தது.

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், தான் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தினர் யாரும் கூட வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். அதன்படி நேற்று மாலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார் மல்லாடி கிருஷ்ணாராவ். இந்நிலையில் இன்று காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜான்குமாரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த இருவரது ராஜினாமாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து கூறிவிட்டதால், காங்கிரஸ் அரசு அதிகாரபூர்வமாக மெஜாரிட்டியை இழந்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பத்திரிகையாளர் சந்திப்பு

30 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில் 3 நியமன எம்.எல்.ஏக்களையும் சேர்த்து மொத்தம் 33 எம்.எல்ஏ.க்கள் இருப்பார்கள். 2016 சட்டப்பேரவை தேர்தலில் 15 இடங்களை வெற்றி காங்கிரஸ் கட்சி, 3 தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த ஆண்டு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல பா.ஜ.கவின் நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரான சங்கரும் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனாலும் உடனே பா.ஜ.கவைச் சேர்ந்த தங்க விக்ரமனை மத்திய அரசு எம்.எல்.ஏவாக நியமித்ததால் மீண்டும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

அதையடுத்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம், எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்தததால் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 30 ஆக குறைந்தது. அதேபோல நேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், இன்று ஜான்குமாரும் ராஜினாமா செய்திருப்பதால் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்திருக்கிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

சபையில் உள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும். ஆளுங்கட்சியான காங்கிரஸில் 10 பேரும், கூட்டணிக் கட்சியான தி.மு.கவில் 3 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவும் என மொத்தம் 14 பேர் ஆதரவு இருக்கிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 பேரும், அ.தி.மு.கவில் 4 பேரும், பா.ஜ.கவில் 3 நியமன எம்.எல்.ஏக்கள் என 14 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். தற்போது இரு தரப்பும் சம பலத்தில் இருப்பதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து சட்டப்பேரவைக்கு கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் வந்த எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, “ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. அவர்களாகவே ஆட்சியில் இருந்து விலகவில்லை என்றால் நாங்கள் ஆளுநரிடம் மனு கொடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் ”ஆளுநர் கிரண் பேடியும், பிரதமர் மோடியும் ஆட்சியை கலைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவையை கலைத்து மக்களிடம் சென்று தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கப் போகிறோம்” என்று பேசி சமூகநலத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.

Also Read: விதிகளை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ?! -கிரிமினல் வழக்கு பதிவுசெய்த புதுச்சேரி போலீஸ்

தற்போது முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆளும் காங்கிரஸ் அரசு தாங்களாக முன் வந்து பதவி விலகினாலும் இரு தரப்புமே சம பலத்துடன் இருப்பதால் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அதனால் புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி வரலாம் என்று கூறுகின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3b5rC1g
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*