புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் - அமுதா தம்பதியின் ஒன்றரை வயது மகள் ரக்ஷிதா. பிறவியிலேயே ரக்ஷிதாவுக்கு கண்பார்வை சம்பந்தமான விநோத குறைபாடு இருந்துள்ளது. கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து மிகுந்த சிரமத்துக்கிடையில் குழந்தைக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், புதுக்கோட்டைக்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் குழந்தையின் நிலை குறித்து எடுத்துக் கூறி, தங்கள் மகளின் மருத்துவச் செலவுக்கு வழிகாட்டுங்கள் என்று செல்வராஜ், அமுதா தம்பதி மனுகொடுக்க, அந்தப் பகுதி எம்.எல்.ஏ-விடம் இதுபற்றி விசாரித்து உடனே உதவி செய்யுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் ஸ்டாலின். அடுத்த நாளே அவர்களது வீட்டுக்குச் சென்ற தி.மு.க ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன், ரூ. 2 லட்சம் சொந்தப் பணத்தினை குழந்தையின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்து உதவினார்.
அதோடு, அமுதாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் தி.மு.க செய்யும் என்று உறுதியளித்து அமுதாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதுபற்றி குழந்தையின் தாய் அமுதாவிடம் பேசினோம். "ரக்ஷிதா பொறந்ததிலிருந்தே கண்ணுல குறைபாடு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கறுப்பு முழி எல்லாம் உள்ள போயிடும், கண்ணு முழுசும் வெள்ளையா மாறிடும். புதுக்கோட்டையில உள்ள தனியார் கண் மருத்துவமனையில்தான் குழந்தைக்குப் பார்க்குறோம். என்ன பேருன்னு சொல்லத் தெரியலை. அந்தப் பேரச் சொல்லி, குழந்தைக்கு கண்ணுல குறைபாடு இருக்கு, குழந்தைக்கு 10 வயசு ஆனதுக்கப்புறம்தான் ஆபரேஷன் எல்லாம் பண்ண முடியும், இப்போதைக்கு ஆப்ரேஷன் பண்ண முடியாதுனு சொன்னாங்க.
'நாங்க கொடுக்கிற மருந்தையும்(ஆயின்மென்ட்), சொட்டு மருந்தையும் விடாம போட்டுக்கிட்டு வந்தா தற்காலிகமாக சரி செஞ்சிக்கிட்டே வரலாம்'னு சொல்லிட்டாரு டாக்டர். மதுரைக்குப் போய் சிலர் பார்க்கச் சொன்னாங்க. வெளியூர்ல போய் பார்க்கிற அளவுக்கு வசதி இல்ல. கூலி வேலைக்குப் போனாதான் நாங்க வாழ்க்கையே ஓட்ட முடியும்.
தூங்கும்போதும் கண்ணு திறந்துதான் இருக்கும் புள்ளைக்கு. கண்ணு நல்லா இருக்க மாதிரி இருக்கும், கறுப்பு முழு உள்ள போய், திடீர்னு முழி சாம்பல் நிறத்துல மாறிடும். ஒரு நாள் சொட்டுமருந்து போடலைன்னாலும், ஆபத்தாகிடும். மருந்து வாங்க முடியாம ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருந்தோம். இந்த நேரத்துல உதவி கிடைச்சிருக்கு. உதவி செஞ்சவங்கள காலம் இருக்க வரைக்கும் மறக்கமாட்டோம். எப்படியோ என்னோட குழந்தையோட கண் பிரச்னைய சரிசெஞ்சிவிட்டுட்டாங்கன்னா அது போதும்" என்கிறார் மகளை அணைத்தபடி.
ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதனிடம் பேசினோம். "கண்ணில் இதுபோன்ற ஒரு விநோதமான நோயை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. என்னால் முயன்ற சிறு உதவியைச் செய்திருக்கிறேன். இது முதல்கட்ட உதவிதான். எங்கள் தலைவர் அந்தக் குடும்பத்திற்கு மருத்துவத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியிருக்கிறார். மருத்துவர்களை நேரடியாக வரவழைத்து சிகிச்சை கொடுக்க முடியுமா என்று யோசித்து வருகிறோம். தொடர்ந்து, அந்தக் குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2ZpDjuc
via
