தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலைகிராமம். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குரங்கணி மலையின் உச்சியில், கொழுக்குமலை தேயிலை எஸ்டேட் உள்ளது. உலகின் மிக உயரத்தில் தேயிலை பயிரிடப்படும் தேயிலை எஸ்டேட் என்ற சிறப்பு இதற்கு உண்டு. மேலும், அங்கு நிலவும் ரம்மியமான சீதோஷ்ன நிலையை அனுபவிக்க, தமிழகம், கேரள மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் கொழுக்குமலைக்கு வருவது வழக்கம். இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி வழியாக ஜீப் பயணத்தில் கொழுக்குமலையை அடையும் ஒரு பாதையும், குரங்கணி மலை கிராமத்தின் வழியே ஒரு மலைப்பாதையும் உள்ளது.
டிரெக்கிங் மீது ஆர்வம் மிக்க சுற்றுலாப்பயணிகள், குரங்கணி வழியாக மலைப்பாதையில் கொழுக்குமலைக்குச் செல்வர். இந்த மலைப்பாதையானது, தமிழக வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட டிரெக்கிங் பாதை இல்லை. மாறாக, குரங்கணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகிராம மக்கள், கொழுக்குமலை தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல பயன்படுத்தும் பாதை. இப்பாதையில், சில உள்ளூர் வழிகாட்டிகள், சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்வர். அப்படி ஒரு முறை குரங்கணி மலைப்பாதை வழியாக கொழுக்குமலை சென்ற சுற்றுலாப்பயணிகள், குரங்கணி திரும்பும் போது தான், அந்தக் கோர விபத்து நடந்தது.
கடந்த 2018 மார்ச் 9-ம் தேதி காலை, கொழுக்குமலைக்குச் செல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரண்டு குழுக்கள், குரங்கணி வந்தனர். அதில், 3 சிறுமிகள் உள்ளிட்ட 36 பேர் இருந்தனர். குரங்கணியில், தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு, மலைப் பாதை வழியாக சென்று, அன்று மாலை கொழுக்குமலைய அடைந்தனர். மார்ச் 11-ம் தேதி காலை, கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு புறப்பட்ட அவர்களுடன், உள்ளூர் வழிகாட்டி ரஞ்சித் என்பவர் இருந்தார். இரண்டு குழுக்களும் மலையில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினர். வழியில் ஒத்தமரம் என்ற இடத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மலை அடிவாரத்தில் இருந்து வேகமாக மேலே வந்துகொண்டிருந்த காட்டுத் தீ, அவர்களை சூழ்ந்துகொண்டது. விரைவாக செயல்பட்ட வழிகாட்டியான ரஞ்சித், 3 சிறுமிகள் உட்பட 10 பேரை மாற்றுப்பாதை வழியாக மலையில் இருந்து கீழிறக்கி, பாதுகாப்பாக குரங்கணி அழைத்துவந்தார். மீதமுள்ள 26 பேர், காட்டுத் தீயில் சிக்கினர்.
சம்பவம் அறிந்த தேனி மாவட்ட நிர்வாகம், மீட்புப் பணியில் இறங்கியது. வனத்துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் நபர்கள் உதவியுடன் மீட்புப் பணியானது, அன்று இரவு முழுவதும் நீடித்தது. காட்டுத்தீயில் சிக்கிய 26 பேரில், 3 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர். 14 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த பலியாகினர். 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். பலியான 26 பேரில், 17 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதிலும் உள்ள வனப்பகுதிகளில், அனுமதியற்ற டிரெக்கிங் பாதைகளை மூடியது வனத்துறை. கொழுக்குமலை செல்லும் குரங்கணி மலைப்பாதையும் நிரந்தரமாக மூடப்பட்டது. சம்பவம் தொடர்பாக, அப்போதைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு. அக்குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து தமிழக அரசிற்கு அறிக்கை சமர்பித்தது. அந்த அறிக்கை இன்று வரை வெளியாகவில்லை.
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள், வருடம் தோறும் குரங்கணிக்கு வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அனுமதியில்லை என்பதால், குரங்கணி மலையடிவாரத்தில், தங்கள் உறவினர்களை மனதில் நினைத்து வழிபாடு நடத்திச் செல்வர். தற்போது வெகு சில உறவினர்களே குரங்கணி வருகின்றனர். ``எங்க ஊருக்கு வந்து இப்படி ஆகிடுச்சே…” என குரங்கணி மலைகிராம மக்கள், இன்றும் அச்சம்பவத்தை நினைவு கூர்ந்து கலங்குகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cmnIl7
via
