திருவண்ணாமலை: தடையை மீறி நாய் விடும் திருவிழா! -மிருகவதை சட்டத்தில் 8 பேர் மீது வழக்கு

0

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகேயுள்ள காட்டுக்காநல்லூர் அம்பேத்கர் நகரில், காளைகள் விடும் விழாவைப்போல் நாய்கள் விடும் திருவிழாவை நடத்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தனர். தெரு முழுவதும் சவுக்கு கட்டைகள், வாழை மரங்கள் கட்டி நாய்களை அவிழ்த்து விடுவதற்காக வாடி வாசலெல்லாம் அமைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர். முதல் பரிசு வெல்லும் நாய்க்கு 1000 ரூபாய், இரண்டாம் பரிசாக 700 ரூபாய், மூன்றாம் பரிசாக 650 ரூபாய் என பத்து பரிசுகள் அறிவித்திருந்தனர்.

விழாக்குழுவின் அறிவிப்பு

‘நாய் கடித்தால், விழா குழுவினர் பொறுப்பு அல்ல’ என்றும் அறிவிப்பு நோட்டீஸில் தெரியப்படுத்தியிருந்தனர். நுழைவுக் கட்டணமாக 100 ரூபாய் வசூலித்துள்ளனர். பரிசுத் தொகை என்றதும் 50-க்கும் மேற்பட்டோர் நாய்களுடன் களத்துக்கு வந்தனர். விழாவைக் காண கூட்டமும் கூடியது. இதில், சுவாரஸ்யம் என்னவெனில், விழாவில் பங்குபெற்ற நாய்கள் பல தெருவில் சுற்றிக் கொண்டிருந்தவை. சில போதை ஆசாமிகளும், இளைஞர்களும் அந்த நாய்களை கயிறு கட்டி இழுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸார் விழா நடைபெறும் இடத்துக்கு விரைந்து வந்தனர். ‘நாய்கள் விடும் விழாவை நடத்தக் கூடாது. அதற்கு அனுமதி கிடையாது’ என்று எச்சரித்து அனைவரையும் கலைந்து போகும்படி கூறியிருக்கிறார்கள். ஆனாலும், சிலர் நாய்களை அவிழ்த்துவிட்டு பதற்றமான சூழலை உருவாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, காட்டுக்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி கண்ணமங்கலம் போலீஸில் புகாரளித்தார்.

விழாவில் கலந்துகொண்ட நாய்கள்

புகார் மனுவில், அனுமதியின்றி நாய்கள் விடும் விழா நடத்திய விழாக்குழு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதேபோல், வண்ணாங்குளம் கால்நடை மருத்துவர் முத்துக்குமரனும் புகார் செய்தார். இதையடுத்து, நாய்கள் விடும் விழாவை அனுமதியின்றி நடத்திய காட்டுக்காநல்லூர் காலனி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், பரத், கணேஷ், ஜெய்கணேஷ், கிரண், ராஜன், செல்லப்பன், ஆகாஷ் ஆகிய 8 பேர் மீது கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டை மீறியதாகவும், நாய்களை துன்புறுத்தி ஓட விட்டதாகவும் மிருகவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sZtfoD
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*