2011-ல் உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தொகுதியை கடந்த இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்று தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. தனித் தொகுதியாக இருந்தாலும் வன்னியர்களும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் ஏற்கெனவே கே.வி.குப்பம் ஒன்றியக் குழு தலைவராக இருந்தவர். அ.தி.மு.க-வில், கிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில், லோகநாதனுக்கே மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பிருந்ததாகவும் பேச்சு அடிபட்டது.
ஆனால், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கே.வி.குப்பம் தொகுதியை கூட்டணி கட்சிக்குத் தாரை வார்க்கப் பரிந்துரைச் செய்துள்ளதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணியிலிருக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை என்றபோதும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியே இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக்கு இந்த தொகுதியை பங்கிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
‘‘அறிமுகம் இல்லாத வெளியூர் வேட்பாளரைக் களமிறக்கினால் தேர்தல் பணிகளைப் புறக்கணிப்போம். கூட்டணிக்கு ஒதுக்கிய முடிவைத் திரும்பப் பெற வேண்டும். தொகுதியைச் சார்ந்துள்ள அ.தி.மு.க நிர்வாகி ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லையெனில், சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதனுக்கே மீண்டும் சீட் கொடுத்தால்தான் தேர்தல் பணி செய்வோம்’’ என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இன்று காலையிலும் அ.தி.மு.க-வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், கே.வி.குப்பத்தில் இன்று காலை நடைபெறவிருந்த புரட்சி பாரதம் கட்சியின் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Od5pXR
via
