தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை, தனது பூர்வீக மாவட்டமான திருவாரூரில் தொடங்கினார். தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘’நான் திருவாரூருக்கு பல முறை வந்துள்ளேன். ஆனால் இப்போது முதல்முறையாக முதலைச்ச வேட்பாளராக திருவாரூர் வந்துள்ளேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள்’’ என உருவக்கமாக பேசினார்.

திருவாரூர் தெற்கு ராஜ விதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், ‘’நான் ஒரு குழந்தையாக திருவாரூர் வந்திருக்கிறேன். பள்ளி மாணவனாக இங்கு வந்திருக்கிறேன். கல்லூரி மாணவனாக, தி.மு.க இளைஞரணி செயலாளராக, சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, தி.மு.க பொருளாளராக, கட்சியின் செயல் தலைவராகவும் வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், தி.மு.க தலைவராகவும் கூட திருவாரூர் வந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் வந்திருப்பது என் வாழ்வில் மறக்க முடியாத மிக முக்கியமான நாள்.
ஆம், முதல்முறையாக, ஒரு முதலைச்சர் வேட்பாளராக திருவாரூர் வந்துள்ளேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, இதே திருவாரூரில் இருந்து தான் தொடங்கினேன். 39-க்கு 38 இடங்கள் தி.மு.க கூட்டணி வெற்றிப் பெற்றது. இப்போதும் இதே திருவாரூரில்தான், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். 234-க்கு 234 இடங்கள், தி.மு.க கூட்டணி வெற்றிப் பெறும் என உறுதியாக நம்புகிறேன். அ.தி.மு.க கூட்டணி கண்டிப்பாக வாஷ் அவுட் ஆகிவிடும்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, 13 ஆண்டுகளுக்கு பிறகு, 1989-ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக ஆனபோது, இதே திருவாரூரில் அவருக்கு வெற்றிவிழா நடத்தினீர்கள். அதே போல் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது, இதே திருவாரூருக்கு என்னையும் வர வைப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி விட்டார்கள். தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டார்கள். இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நாக்கில் நரம்பில்லாமல், ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு, கருணாநிதியும் ஸ்டாலினும் தான் காரணம் என்கிறார். இப்படி ஒரு பொய்யை, நா கூசாமல் சொல்ல, பழனிசாமிக்கு எப்படி மனம் வந்தது. 2016-க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தானே இங்கு முதலமைச்சர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நான் தான் காரணம் என்றால், ஏன் என் மீது வழக்கு தொடரவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஏன் பழனிசாமி இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டிப்பாக கண்டுபிடிப்போம். அதற்கு காரணமானவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம். இந்த ஆட்சியில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. கொரோனா நேரத்தில் துடைப்பம் வாங்கியதில் ஊழல். பிலிச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல். நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. இந்த ஸ்டாலின் முதலமைச்சராகி விட்டால், பிறகு ஊழல் செய்தவர்கள் எவரும் தப்பிக்க முடியாது ’’என்றார்.
திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி,ஆர்.பி. ராஜா, நன்னிலம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாரிமுத்து, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் வேதரத்தினம் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின், இவர்களை வெற்றிப் பெற செய்யுமாறு பிரசாரம் மேற்கொண்டார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2NkCCQq
via
