'ஆணித்தரமாகச் சொல்கிறேன் கன்னியாகுமரியில் வர்த்தகத் துறைமுகம் வராது' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ``நடக்க இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வெற்றி வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி கழக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜான்தங்கம், விளவங்கோடு பா.ஜ.க வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோருக்கும் வாக்களிக்க வேண்டுகிறேன். பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர். அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அவர்களுக்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர். இந்த மாவட்டம் எழுச்சிபெற, ஏற்றம் பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்று தந்திருக்கிறார். மாவட்டம் வளர்ச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள்.

கன்னியாகுமரியில் துறைமுகம் வராது என நாகர்கோவிலில் முதல்வர் பிரசாரம்

கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் பிரச்னைகள் எங்களிடம் கொண்டுவரப்படவில்லை. இங்குள்ள திட்டம் நிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியை வெற்றிபெறவையுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்ச்சி நடக்கும். எப்படி நீங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும். முழுமையான திட்டங்கள் இங்கு வந்துசேரவில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் அவர்கள் பார்ப்பார்கள், மாவட்டத்தை கவனிக்கமாட்டார்கள். எனவே பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மாவட்டம் வளர்ச்சிபெறும். ஏனென்றால் மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடப்பதால் திட்டங்களை கொண்டுசெல்ல முடியும்.

எதிர்கட்சியினர் தவறான , அவதூறான செய்திகளை பரப்புகிறார்கள். கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் வருவதாக அவதுறு செய்தி பரப்பப்படுகிறது. சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது. மீண்டும் சொல்கிறேன் மக்கள் எதிர்கட்சிகள் சொல்வதை நம்ப வேண்டாம். தேர்தல் நேரத்தில் தி.மு.க காங்கிரஸ் சேர்ந்து மீனவர்களின் ஓட்டுக்காக இதை பரப்புகிறார்கள். துறைமுகத் திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டனர். எதிர்கட்சிகள் மக்களிடம் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். எனவே மீனவர்களும் பொதுமக்களும் பொய் செய்தியை நம்ப வேண்டாம். ஆணித்தரமாக சொல்கிறேன் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படாது.

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

நான் கடினப்பட்டுதான் பேசுகிறேன். எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதால், பேசிப் பேசி தொண்டை கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் பொய்தான். பொய்யை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்தும் கட்சிகள் தி.மு.க காங்கிரஸ் கட்சிகள்தான். மக்களின் கோரிக்கையை ஏற்று, நாகர்கோவிலில் மாநகராட்சி ஆக்கினோம். தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கையை நிறைவேற்றினார்களா? எங்களுக்கு எம்.எல்.ஏ முக்கியம் அல்ல மக்கள்தான் முக்கியம். நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது ஜெயலலிதா அரசு. நல்ல சாலை, குடிநீர் வசதிகளை கொண்டுவருகிறோம். தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் சமயத்தில் சொன்ன மிக்‌சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினோம். தி.மு.க-விடம் சொல்லுங்கள், அ.தி.மு.க திட்டங்களை கொடுத்தார்கள் என்று. கடந்த பத்து ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என தவறான தகவலை பரப்புகிறார்கள்.

தி.மு.க ஆட்சி இருண்ட ஆட்சி. கடுமையானமின் வெட்டு இருந்தது. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என தெரியாது. நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை. இன்று தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். இப்போது அதிகமான தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகிறது. அதன் மூலம் பொருளாதார ஏற்றம் பெறுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மத்திய அரசு தேவையான உதவிகளை செய்கிறது. இன்று தமிழகம் வெற்றிநடைப்போடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/31qw5Hi
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*