எம்.பி.பி.எஸ், பி.இ படிப்புகளுக்குத் தமிழ் வழியில் புத்தகங்களை உருவாக்கியவரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் துறையின் முன்னாள் தலைவருமான முனைவர் ராமசுந்தரம் தஞ்சாவூரில் காலமானார்.
ஒரு மொழி எப்போதும், எல்லா காலத்திலும் உயிர்ப்புடன் இருக்கவேண்டுமென்றால், அது கால சூழலுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு... இலக்கண, இலக்கியங்களுக்கு உரை எழுதுவதும், புதிய படைப்பிலக்கியங்களை உருவாக்குவதும் எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட மிக முக்கியமானது, இது அறிவியல் மொழியாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இத்தகைய உயரிய பணியில் ஈடுபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் முனைவர் ராமசுந்தரம்.
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ராமசுந்தரம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக பயின்று, அங்கேயே பேராசிரியராகவும் பணி புரிந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், இப்பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்கு அரும்பணியாற்றியவருமான வ.ஐ.சுப்ரமணியனின் அழைப்பை ஏற்று, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இங்கு அறிவியல் தமிழ்த் துறை உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் ராமசுந்தரம் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, தமிழ் வழியில் எம்.பி.பி.எஸ்., பி.இ படிப்புகளை நடத்த, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை, வல்லுநர்கள் துணையோடு உருவாக்கினார்.
இவர் தமிழ் பற்றாளராக மட்டுமல்லாமல், மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். வானமாமலை, கைலாசபதி, சிவதம்பி ஆகியோர் வரிசையில் முனைவர் ராமசுந்தரமும் மார்க்சிய ஆய்வு நூல்களை தமிழில் எழுதியுள்ளார். போலந்து நாட்டில் உள்ள வார்ஷா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ராமசுந்தரம் அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்.
போலந்து நாட்டின் மொழியான போலீஷில், திருக்குறளை மொழி பெயர்த்தவர் முனைவர் ராமசுந்தரம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் சென்னையில் செயல்பட்டு வந்த நாணயம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது எல்லீஸ் பிரபு, தென்னியந்திய மொழிகள் குறித்து ராமசுந்தரம் எழுதிய பதிவை, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தாமஸ் ட்ரவுட் மேன் 'திராவிடன் எவிடன்ஸ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருந்தார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை, முனைவர் ராமசுந்தரம் தமிழில் மொழிப் பெயர்த்து நூலாக வெளியிட்டார். ஒன்றாம் வகுப்பு முதல் பல்கலைக்கழக படிப்புவரை தமிழ் வழியில் கற்பிக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் முனைவர் ராமசுந்தரம்.
Also Read: `க்ரியா’ தமிழ் அகராதியில் திருநர் சொற்கள்... மாற்றுப்பாலினத்தவர் பெருமிதம்!
இந்தியாவில் 64 விதமான இராமாயணம் இருப்பதாக கண்டறிந்தவர் முனைவர் ராமசுந்தரம். இவர் தமிழின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றியதோடு மட்டுமல்லாமல், போராளியாகவும் திகழ்ந்தவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் எந்தவித பாரபட்சமும் இன்றி, நிரந்தர ஊழியராக நியமன செய்யப்பட வேண்டும் என 60 நாள்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.
தஞ்சாவூரில் வசித்து வந்த முனைவர் ராமசுந்தரம் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நல குறைவினாலும் இன்று உயிரிழந்தார். முனைவர் ராமசுந்தரத்தின் இழப்பு, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு. இவரது மறைவிற்கு விகடன் புகழஞ்சலி செலுத்துகிறது!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Pz4scr
via
