மணல் அள்ள அனுமதி; கமலின் விமர்சனம் `அரைவேக்காட்டு பேச்சு’ என செந்தில் பாலாஜி பதிலடி

0

கரூர் நகரில் பிரசாரம் மேற்கொண்ட செந்தில் பாலாஜி, ”தி.மு.க ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே, மணல் வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படும். அதை அதிகாரிகள் யாரும் தடுக்கமாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள்” என்று பேசி, சர்ச்சைக்கு வித்திட்டார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், செந்தில் பாலாஜியின் இந்த 'மணல்' பேச்சு குறித்து டிவிட்டரில் விமர்சிக்க, பதிலுக்கு செந்தில் பாலாஜி கமலை, 'அரைவேக்காட்டுத்தன பேச்சு' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமராவதி ஆறு

தி.மு.கவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, தற்போது அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். வரும் தேர்தலில் தனது சொந்த தொகுதியான கரூரில் போட்டியிடுகிறார். அதற்காக, தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். கரூர் மாவட்டத்தில் ஓடும் அமராவதி மற்றும் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ள, மாவட்ட நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இந்த நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்த செந்தில் பாலாஜி, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதிக்கப்படும். தி.மு.க ஆட்சி அமைத்ததும், யாரையும் கேட்காமல் நீங்கள் ஆற்றுக்குள் மாட்டு வண்டியை இறக்கி, மணலை அள்ளலாம். அதை, அதிகாரிகள் யாரும் தடுக்கமாட்டார்கள். அப்படியே தடுக்கும் அதிகாரிகள் யாரும் இருந்தால், அவர்கள் இங்கே பணியாற்ற மாட்டார்கள்" என்று பேசினார்.

செந்தில் பாலாஜியை விமர்சித்த கமல்

செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு, பலத்த சர்ச்சைக்கு வித்திட்டது. சமூகவலைதளங்களில் பலர் செந்தில் பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 'தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்றுமணல் கொள்ளையை தொடங்கிவிடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

Also Read: கரூர்: `இது, காமராஜ் எக்ஸ்சேஞ்ச் மேளா!’ - கிருஷ்ணராயபுரம் தொகுதி விநோதம்

இந்த நிலையில், கமலின் இந்த ட்விட்டுக்கு, செந்தில் பாலாஜி, 'கமல் ஒரு அரை வேக்காடு' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடம்பங்குறிச்சி, நன்னியூர், செவ்வந்திபாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் மக்களிடையே பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கரூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி, காவிரி ஆற்றுப்படுகைகளிலிருந்து உள்ளூர் கட்டுமானத் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இது, சட்டத்துக்கு புறம்பானது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இயந்திரங்களை வைத்து, லாரி போன்ற கனரக வாகனங்களில் தான் மணல் அள்ளக்கூடாது என்பது தான் விதியாக உள்ளது. இந்த அடிப்படைகூட நடிகராக உள்ள கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. கரூர் மாவட்டத்தில் சுமார் 15,000 மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ள முடியாததால், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை செய்தால், அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை உள்ளது?. காரணம், இத்தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். அது பாதிக்கப்படும் என்பதற்காகவே மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

அதனால் தான், இந்த உத்தரவாதத்தை மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அளிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், மாட்டு வண்டியில் மணல் அள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தேன். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசு இதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. கரூர் மாவட்ட காவிரி ஆற்றங்கரையில் ஐந்து இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் உள்ளூர் தேவைகளுக்கு மணல் அள்ள இடம் தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்தது. ஆனால், இன்றுவரை அதற்கான முறையான அரசு ஆணை வெளியிடப்படவில்லை. இப்படி வாழ்வாதாரத்துக்காக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதை தடுப்பவர்கள் தான், மணல் கொள்ளை அடிக்கும் ஆளுங்கட்சினருக்கு துணைபோகிறார்கள். அதனால், கொல்லைப்புறமாக நடைபெறும் மணல் கொள்ளைக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விவரமெல்லாம் தெரியாமல் கமல்ஹாசன் அரைவேக்காடு போலப் பேசுகிறார்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3c00BOg
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*