சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த நிலையில், தினகரன் பக்கம் வலுவாக உள்ள அ.ம.மு.க நிர்வாகிகள் சிலருக்கு வரும் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறி தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் அ.ம.மு.கவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான ரெங்கசாமி தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருப்பவர் ரெங்கசாமி. இவர் அ.தி.மு.கவில் தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட மாற்றத்தினால் டி.டி.வி தினகரன் அணிக்கு சென்றார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்.எல்.ஏ பதவியை இழந்தவர்களில் இவரும் ஒருவர்.
அ.ம.மு.க தொடங்கப்பட்ட பிறகு அதன் மாநில பொருளாளராக பதவி வகித்தவர், தற்போது அதன் துணைப் பொதுச்செயலாளரக இருந்து வருகிறார். இந்நிலையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் ரெங்கசாமியை போட்டியிட வைப்பதற்கு அ.தி.மு.க தலைமை முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே போல் தினகரன் பக்கம் உள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அ.ம.மு.கவிலிருந்து, அ.தி.மு.கவிற்கு வந்தால் உங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட், அதனுடன் தேர்தல் செலவிற்கான பணத்தையும் தருகிறோம் என முதலவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
அ.ம.மு.கவினால் அ.தி.மு.கவின் வெற்றி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. அதற்கு தினகரன் பக்கம் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து தினகரனை பலவீனமடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதனை செய்வதாகவும் தஞ்சாவூர் அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசினோம், சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வெளியே வந்த பிறகு அ.தி.மு.கவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர் பார்க்கபட்டது. அ.தி.மு.க, அ.ம.மு.க இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவுமே நடக்காத நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அரசியலை விட்டு ஒதுகுவதாக சசிகலா அறிவித்தார்.
சசிகலாவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது. டி.டி.வி தினகரனும் இது போன்ற முடிவை எடுக்க வேண்டும் என பி.ஜே.பி தரப்பில் வெளிப்படையாக பேசப்பட்டது. ஆனால் தினகரன், அ.ம.மு.கவை தலைமையாக ஏற்க கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம் என தெரிவித்து வருகிறார்.
தினகரன் பக்கம் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் தங்க.தமிழ்செல்வன்,செந்தில்பாலாஜி ஆகியோர் தி.மு.கவிற்கு தாவி விட்டனர். ஒரு சிலர் அடுத்து சென்ன செய்வது என புரியாமல் தவித்ததுடன் சசிகலா வருகைக்கு பிறகு நமக்கான முக்கியத்துவம் கிடைக்கும் எனவும் காத்திருந்தனர். சசிகலாவின் விலகல் அறிவிப்பு அவர்களை சோர்வடைய செய்துள்ளது. அ.ம.மு.க தேர்தலிலும் போட்டியிட்டாலும் அ.தி.மு.கவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர நாம் ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் தேர்தலில் செலவு செய்ய கையில் காசும் இல்லாமல் தவிக்கின்றனர்.
சசிகலா ஒதுங்குவதாக அறிவித்தது போல் தினகரன் ஒதுங்கி கொள்ளமாட்டார். அவர் மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார். அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்டால் அது அ.தி.மு.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர் நினைக்கிறார். உளவுத்துறை ரிப்போர்டும் அப்படித்தான் இருப்பதாக சொல்லப்பட்டது. அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசும் போது, `அ.ம.மு.கவை சாதாரணமாக நினைக்காதீர்கள். அவர்கள் கொங்கு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் தென் மண்டலம் மற்றும் டெல்டாவில், நமக்கு பாதிப்பை உண்டாக்குவார்கள். எனவே யோசித்து செயல் படுங்கண்ண’ என கூறியிருக்கிறார்.
இது முதல்வர் தரப்பை யோசிக்க வைத்தது. அதே நேரத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி சீட் கேட்ட போது அ.ம.மு.கவுக்கும் சேர்த்து தொகுதிகள் கேட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனையும் முதல்வர் கவனத்தில் எடுத்து கொண்டார். இந்நிலையில் தான், தினகரன் பக்கம் உள்ள பல மிக்க முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு சீட் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து விட்டால் தினகரன் கூடாரம் காலியாகிவிடும். தினகரன் தனிமரமாகி விடுவார். தேர்தலிலும் முழு வேகத்துடன் செயல்பட முடியாது. அ.தி.மு.கவின் வெற்றிக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என முதல்வர் நினைக்கிறார்.
இதன் முதற்கட்டமாக வைத்திலிங்கம் மூலம் ரெங்கசாமியிடம் பேசியதாக தவல்கள் வெளியாகியுள்ளது. ரெங்கசாமி தினகரன் பக்கம் சென்ற போது தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்ததுடன், அ.தி.மு.கவில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அவர் அ.ம.மு.கவிற்கு சென்ற பிறகே மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு அப்போது அந்த பதவி கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் வைத்திலிங்கம் தரப்பு, ரெங்கசாமியிடம் நீங்க தினகரன் பக்கம் போகாதீங்க.. உங்களை அமைச்சர் ஆக்குகிறேன் என கூறியும் கேட்காமல் சென்று விட்டார். அதை இப்ப நினைவு படுத்தி, `என் பேச்சை கேட்டிருந்தால் நீங்க அமைச்சராக இருந்திருப்பீங்க. இப்பவாச்சும் எங்க கூட வந்துருங்க. உங்களுக்கு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சீட் தருகிறோம்’ என பேசியிருக்கின்றனர்.
இதனை பொறுமையாக கேட்ட ரெங்கசாமி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ரெங்கசாமி அ.ம.மு.கவில் சீட் வாங்கி போட்டியிட்டு செலவும் செஞ்சும் புண்ணியமில்லை என நினைப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவர் அ.தி.மு.கவுக்கு வருவதற்கு தயாராகி விட்டார் எனவும் தஞ்சாவூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராகவும் அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக பலமான பேச்சு அடிபடுகிறது. இதே போல் தமிழகம் முழுவதும் தினகரன் பக்கம் இருக்கும் மக்கள் செல்வாக்குள்ள நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியும் நடக்கிறது. தினகரன் எதிர்ப்பை சரிகட்ட முதல்வர் தரப்பு எடுத்திருக்கும் அஸ்திரமே இது எனவும் பேசப்படுகிறது.
அ.தி.மு.க தரப்பை சேர்ந்தவர்களிடம் பேசினோம், அ.தி.முக தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளதால் எங்கள் வெற்றி உறுதியாகியுள்ளது. தினகரனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சிக்கு விவ்சுவாசமாக இருப்பவர்களுக்குத்தான் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட தலைமை சீட் கொடுக்கும்என நம்புவதாகவும், கூட்டணியில் பி.ஜே.பிக்கு தஞ்சை தொகுயினை கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
Also Read: Edappadi-க்கு தெரியாமல் நடக்கும் அதிமுக-அமமுக இணைப்பு?Journalist SP Lakshmanan Interview
ரெங்கசாமி தரப்பில் விசாரித்தோம்,ரெங்கசாமி சசிகலாவிற்கு உறவுக்காரர். தினகரன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். எவ்வளவோ ஆசைகாட்டியும் அவர் அ.தி.மு.கவிற்கு செல்லாமல் விசுவாசமாக இருந்தவர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே அவர் அ.தி.மு.கவிற்கு செல்லப் போவதாக வதந்தி பரவியது. ஆனால் அவர் செல்லவில்லை. தற்போது அ,ம.மு.கவின் தேர்தல் பணியில் ரெங்கசாமி மும்மரமாக இருப்பதுடன் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி சார்பாக போட்டியிடவும் தயாராகி வருவதாக கூறுகின்றனர். விரைவில் கட்சிகள் தங்களின் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சூழலில், அனைத்து குழப்பங்களுக்கும் அப்போது விடை கிடைத்துவிடும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uXQSzJ
via
