விஐபி தொகுதி: விராலிமலை... கரைசேர்வாரா விஜயபாஸ்கர்?

0

விராலிமலை தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்ற அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மூன்றாவது முறையாக மீண்டும் களமிறங்குகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தொகுதிக்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொங்கல் சீர், இலவசக் கண் கண்ணாடி, மூன்று சக்கர ஸ்கூட்டி, வேலைவாய்ப்பு முகாம் என ஏராளமாக அள்ளித்தெளித்திருக்கும் விஜயபாஸ்கர், வெற்றிவாகை சூட தன்னுடைய கொரோனாகால நிவாரணம் ஒன்றே போதும் என்று தெம்பாக இருக்கிறார்.

பழனியப்பன்

குடிநீர்த் தட்டுப்பாட்டைக் களைந்திருப்பது, தன் தொகுதியில் முதலமைச்சரை வைத்து காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பது, அனைத்து வகையான அரசுத்துறை அலுவலகங்களையும் தொகுதிக்குள் கொண்டுவந்திருப்பது ஆகியவை விஜயபாஸ்கருக்கு ப்ளஸ். தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, வீட்டுக்கு வீடு இலவச வேட்டி, சேலை கொடுத்திருப்பதையும் விஜயபாஸ்கர் பெரிதாக நம்புகிறார். அவ்வப்போது பூதாகரமாகும் ஊழல் குற்றச்சாட்டுகளும், கட்சி சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அவருக்கு மைனஸ். பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி கொண்டுவரவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் இருக்கிறது. எல்லாச் சங்கடங்களையும் ‘சத்து’ மாத்திரைகள் சரிசெய்துவிடும் என்ற மனநிலையில் இருக்கிறார் அவர்.

விஜயபாஸ்கருக்கு எதிராகக் களமிறங்கும் தி.மு.க வேட்பாளர் பழனியப்பன் தொகுதிக்குப் புதியவரல்ல. 2016 சட்டமன்றத் தேர்தலில் விஜயபாஸ்கருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தவர்தான் அவர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் சரிசமமான சமுதாய வாக்குவங்கி இருக்கிறது. பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த பழனியப்பன், தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகளில் முதல் ஆளாக நிற்பதால், மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தன் சொந்தச் செலவில் செய்துகொடுத்திருக்கிறார். இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

விஜயபாஸ்கர்

தொகுதியில் சுமார் 30,000 முத்தரையர் வாக்குகள் உள்ளன. இவற்றைக் குறிவைத்து, அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞரணித் துணைத் தலைவர் நெமிலிநாதனும், மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகள் தனலெட்சுமியும் சுயேச்சையாகக் களமிறங்கினார்கள். அவர்களில் நெமிலிநாதனை தாஜா செய்து வாபஸ் வாங்கவைத்துவிட்டது விஜயபாஸ்கர் தரப்பு. ஆனாலும், ‘அமைச்சரைத் தோற்கடித்தே தீருவோம்’ என்று முத்தரையர் சங்கங்கள் கொடிபிடிப்பதால், விஜயபாஸ்கருக்கு வழக்கமாகக் கிடைக்கும் முத்தரையர் வாக்குகளில் சரிவு ஏற்படும் என்கிறார்கள். இதுபோக அ.ம.மு.க வேட்பாளர் கார்த்திக், அ.தி.மு.க வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கக்கூடும் என்பதால், விஜயபாஸ்கர் திணறித்தான் போயிருக்கிறார்.

விஜயபாஸ்கருக்கு எதிராக எட்டுத் திசையிலிருந்தும் நெருக்கடிகள் சூழ்வது தி.மு.க வேட்பாளர் பழனியப்பனுக்குச் சாதகமாகியிருக்கிறது. இருப்பினும், முந்தைய பரிசளிப்புகள், கடைசி நேரத்தில் தரப்படும் ‘சத்து’ மாத்திரைகள் தன்னைக் கரைசேர்க்கும் என்று உறுதியாக நம்பியிருக்கிறார் விஜயபாஸ்கர். இன்றைய சூழலில், தொகுதிக்குள் கடும் போட்டி நிலவுகிறது!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/398PVv7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*