சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக இன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தபடி வைத்திலிங்கம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தடைந்தார். அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து மதியம் 12.05 மணிக்கு நல்ல நேரம் என்பதால் கொஞ்சம் நேரம் காத்திருந்த பிறகு தேர்தல் நடத்தும் அலுவலரான பழனிவேலிடம் வைத்திலிங்கம் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னிடம் அசையும் சொத்துக்களாக உள்ள தங்கம், வங்கி சேமிப்பு உள்ளிட்டவைகளின் மதிப்பு 72.01 லட்சம் எனவும், வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு 2.41 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதில், தனிநபர்கள் 7 பேரிடமிருந்து 50.96 லட்சம் கடனாக பெற்றுள்ளதாகவும் அத்துடன் தனது மகன் சண்முகபிரபுவின் டாக்டர் படிப்பிற்காக, வங்கியில் 9.56 லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்று பல ஆண்டுகளாக, அந்தக் கடன் அடைக்கபடாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது மூத்த மகனான பிரபுவிடமிருந்து 27.54 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தவிர, தனது மனைவியிடம் 45 பவுன் நகையும், வங்கியில் உள்ள 1.95 லட்சம் ரூபாயுடன் கையிறுப்பு பணமும் சேர்த்து 14.66 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மூன்று முறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் தனது மகனின் டாக்டர் படிப்பிற்காக வாங்கிய வங்கி கல்வி கடனை அடைக்காதது குறித்து வெளியான தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tF022J
via
