"அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கார் இல்லையாம்....ஆனால், என்னிடம் ஆட்டோ உள்ளது..." என்று திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் டச்சிங்காக பேசியுள்ளது அப்பகுதி மக்களை கவர்ந்துள்ளது.
திமுக கூட்டணியில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சிபிஎம்மில் எஸ்.கே பொன்னுத்தாய் போட்டியிடுகிறார்.
பொன்னுத்தாயியின் கணவர் ஆட்டோ ஓட்டுநர். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர். ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதே அவர் தேர்தல் பரப்புரைக்கு செய்யும் பெரிய செலவு. எளிமையான பின்னணி கொண்டவர் என்பது ஒருபுறம் இருந்தாலும், மக்கள் சேவையில் தொகுதி மக்கள் மனதில் வலுவான தடம் பதித்தவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கும் பொன்னுத்தாய், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராகவும் சாதிய தீண்டாமைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களில் முன்னின்று நடத்தி மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்றாவர். அந்த அடிப்படையில் அவரை சிபிஎம் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயில் அருகில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுபினர் சு.வெங்கடேசன், " மதுரை எம்.பி.யாக தோழர் பி.மோகன் இருந்தபோதுதான் திருப்பரங்குன்றம் பகுதி வளர்ச்சிக்காக கேந்திரியா வித்யாலயா பள்ளியையும், வடபழஞ்சியில் தொழில்நுட்ப பூங்காவையும் கொண்டு வந்தார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு, தொழில்நுட்ப பூங்காவுக்கு ஒரு நிறுவனத்தைக் கூட கொண்டு வரவில்லை. அதுபோல் இத்தொகுதியில் தென் மாவட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.
அதுபோல் தென் மாவட்ட தொழில்துறை வளர்ச்சி அடைவதற்கு முக்கியமான விமான நிலைய விரிவாக்கப்பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் செயல்பட திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு இத்தொகுதி மக்கள் பொன்னுத்தாயை ஆதரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியை சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகனின் முதல் படைவீடான இங்கிருந்து பிரசாரத்தை தொடங்குகிறோம்" என்றார்.
வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசும்போது, "நீண்ட காலத்துக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் பெண் வேட்பாளர் போட்டியிட கட்சி அனுமதித்துள்ளது. மக்களோடு மக்களாக பழகும் எனக்கு இங்குள்ள மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தெரியும்.
அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கார் இல்லை என்று தன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளாராம், ஆனால், என்னிடம் ஆட்டோ உள்ளது. என் கணவர் ஆட்டோ டிரைவர். அதனால், எளிய மக்களின் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் எனக்கு மக்கள் வாக்களிப்பார்கள்" என உற்சாகமாக பேசும் பொன்னுத்தாய், ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாலும் இதே ஆட்டோவுல தான் போவேன் என்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qPtfGc
via
