“எனக்கு 66 வயதாகிவிட்டது. வாய்ப்பு கொடுங்கள். நேரமில்லை..” கோவை தேர்தல் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உதிர்த்த வார்த்தைகள் இவை. சினிமா, பிக்பாஸ் என்று வலம் வந்து கொண்டிருந்த கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு, தனது 63-வது வயதில் அரசியல் வருகையை உறுதி செய்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டாலும், கமல் களமிறங்கவில்லை.
Also Read: `மகாராஷ்டிரா 1 ட்ரில்லியன் டாலர் எகானமியைத் தாண்டிவிட்டது!' - கமல் சொன்னது சரிதானா?
ஆனாலும், அந்தத் தேர்தலில் கொங்கு மண்டலம் மற்றும் நகர் பகுதிகளில் ம.நீ.ம குறிப்பிடத்தக்க வாக்குகளை வாங்கியது. அந்த நம்பிக்கையில் வருகின்ற சட்டசபை தேர்தலில், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனால், கோவை தெற்கு தொகுதி உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. கமல் கோவையில் போட்டியிடுகிறார் என்கிற தகவல் கோவை முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரை எதிர்த்து பி.ஜே.பி தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக கடந்த ஒரு வாரமாக கமலும், மய்யத்தின் மூத்த நிர்வாகிகளும் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளின் தேர்தல் பணி எப்படி என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் பணிமனை அமைத்து, பூத் கமிட்டி வாரியாக சுழன்று கொண்டிருப்பார்கள். மேளதாளங்கள் முழங்க வேட்பாளர்கள் வீதி வீதியாக பிரசாரம் செய்வார்கள்.
ஆனால், மக்கள் நீதி மய்யம் இதில் மாறுபடுகிறது. கமல்ஹாசன் தங்கியுள்ள தாஜ் விவன்டா நட்சத்திர ஹோட்டல்தான், மக்கள் நீதி மய்யத்தின் அறிவிக்கப்படாத தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மய்ய மூத்த நிர்வாகிகளும் அங்கு தங்கியுள்ளனர். பெரும்பாலான ஆலோசனை கூட்டங்கள், முக்கியஸ்தர்கள் சந்திப்பு அங்குதான் நடக்கிறது. அவ்வபோது, வெளியில் சென்று சில முக்கியஸ்தர்கள், அமைப்பினரை சந்திக்கின்றனர்.
சற்று இடைவெளி விட்டு தெற்கு தொகுதி மற்றும் கோவையின் மற்ற தொகுதிகளில் கமல் அவ்வபோது பிரசாரம் செய்கிறார். கமல் சார்பாக, மய்யத்தினரும் வீதி வீதியாக பிரசாரம் செய்கின்றனர். கோவையில் தங்கியபடியே மற்ற பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று கமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கூட்டம் பெரிய அளவுக்கு இல்லை என்பதால், உடுமலைப்பேட்டைக்கு ஹெலிகாப்டரில் சென்ற கமல், பிரசாரத்தை ரத்து செய்து வந்துவிட்டார். கிராமப்புற பகுதிகளில் மய்யத்துக்கு வரவேற்பு இல்லை என்ற சம்பவத்துக்கு இது உதாரணம். ஹெலிகாப்டருக்கு அனுமதி இல்லை என்பதால் பல ஊர்களில் கமல் வருகை ரத்து செய்யப்பட்டது. கூட்டம் சொதப்பக் கூடாது என்பதால், மற்ற கட்சிகள் 200, 300 என்று கொடுப்பதை போல, மய்யத்தினர் ரூ.500 + உணவு கொடுத்து கூட்டம் சேர்க்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை முதல் கமல் கோவையில் இருக்கிறார். அன்றைய தினம் இரவு ராஜவீதியில் ம.நீ.ம பொதுக்கூட்டம் நடைபெற்றது. 6 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம், 7.30 மணிக்குமேல்தான் ஆரம்பித்தது. கமல்ஹாசன் 8.45 மணிக்கு கமல் மேடைறினார்.
மேடைக்கு மேடை கமல் எங்களிடம், “நேர்மை இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்று” என்று கூறி வருகிறார். மய்யத்தின் பொதுக்கூட்டத்துக்காக, கோவையின் முக்கிய பகுதியான ராஜவீதியில் சாலை முடக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நகர்பகுதியில் நடக்கும் மக்கள் நீதி மய்ய பொதுக் கூட்டங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இதில். “மற்ற கட்சிகளுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?” என கோவை மக்கள் அதை கடந்து வருகின்றனர்.
அதன்பிறகு, ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் செல்வது, ஜிம்முக்கு சென்று சிலம்பம் சுற்றுவது, ஆட்டோவில் செல்வது, டீக்கடையில் மக்களிடம் பேசுவது என்று தனது வருகையை பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
கமல் களத்துக்கு வந்தாலும், ம.நீ.ம ஐ.டி டீம், பௌன்சர்கள், ஊடகங்களை கடந்து அவரை நெருங்குவதற்கு மக்கள் படாதபாடு படவேண்டியிருக்கிறது. கமல் நிகழ்வுகளை ப்ரமோஷன் செய்வதற்கு, அவரை சுற்றி பெரிய ஐ.டி டீம் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. களத்தில் அவர்களின் கூட்டம் கணிசமாக இருக்கிறது. அதைக் கடந்தால், கணக்கு எடுக்க முடியாத அளவுக்கு பெளன்சர்கள், பாதுகாவலர்கள் கமலை சுற்றியிருக்கின்றனர். அவர்கள் ஊடகங்கள், பொது மக்களிடமும் கறார் காட்டி வருகின்றனர்.
Also Read: ``எனக்கு 66 வயது... நேரமில்லை... வாய்ப்பளியுங்கள்’’ - கோவை கூட்டத்தில் கமல்ஹாசன்
இதனால், வெளியில் சென்றாலும் மக்கள் கமலை சந்திப்பதில் குளறுபடிகள் உள்ளன. ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சென்றபோது, ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த கமல் காலை யாரோ மிதித்து வீக்கம் ஏற்பட்டுவிட்டது. விளைவு, அன்றைய திட்டங்களை ரத்து செய்துவிட்டு, கமல் ஓய்வு எடுக்க வேண்டியதாகிவிட்டது. அம்மன்குளம் பகுதிக்கு கமல் சென்றபோது, மக்கள் மிகுந்த போராட்டத்துக்கு பிறகே கமலிடம் பேச முடிந்தது.
அப்போதும் கமலுடன் இருந்தவர்கள் அந்த மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சி செய்தனர். கடுப்பான ஒரு பெண், “நீங்க அமைதியா இருங்க.. இவருதான வேட்பாளர் அவர் பதில் சொல்லட்டும். அதுதானே நியாயம்?” என்றனர். அதன் பிறகு கமல் அவர்களுடன் உரையாடினர். தகவல் தொடர்பு, நேரம் கடைபிடித்தல் போன்றவற்றில் மய்யத்துக்கும், மற்ற கட்சிக்கும் வித்தியாசம் இல்லை. மேடையில் ஆக்ரோஷமாக பேசும் கமல், மக்களின் கேள்விகளுக்கு சற்று தடுமாறவே செய்கிறார்.
“கோவையில் சிறு, குறு , நடுத்தர நிறுவனங்கள் நசுங்கிக் கொண்டிருக்கின்றன. மூலப்பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” இது கோவை வாசி ஒருவரின் கேள்வி. அதற்கு கமல், “நான் தனிமனிதனாக செய்து பார்த்து நடக்கவில்லை என்பதால்தான் அரசியலுக்கு வந்தேன். நான் வந்து, தனி ஆளாக...” என்று வேறு ஒரு ட்ராக்கில் பதில் சொன்னார்.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது கூட, அருகில் இருந்த பொன்ராஜிடம் கேட்டு கேட்டுதான் கமல் அறிவித்துக் கொண்டிருந்தார். “ஊழல்வாதிகளின் பிடியில் உள்ளதால், இங்கு வருகிறோம்” என்று கமல் சொல்கிறார். ஆனால், அங்கு என்ன மாதிரியான ஊழல்கள் நடந்துள்ளன? என்பது குறித்து எளிய மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள கமல் அதை செய்வதில்லை.
ஏற்கெனவே வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து வந்தார். திருப்பூரில் ம.நீ.ம பொருளாளர் ஐ.டி ரெய்டு தொடர்பாக, “அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ப்ரஸில் இருந்து வரும் உத்தரவுக்காக எல்லாம் தண்டிக்க முடியாது. ட்ரெய்ல் பை மீடியா செய்யவே கூடாது” என்கிறார்.
குற்றம் உறுதியானால் பார்ப்போம் என்பது கமலின் விளக்கம். அந்த நபர் குற்றவாளி என்பது உறுதியாகவில்லை என்பதைபோல, அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்பது உறுதியாகிவிட்டதா? அதேநபர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏதாவது ஆதாரத்தை வெளியிட்டு அல்லவா கமல் இதை சொல்லியிருக்க வேண்டும்?. அதுதானே அறம்?. அதைவிட்டு, பொதுவெளியில் நேர்மை அரசியலை முன்னிறுத்தி, அதற்கு நேரெதிரான ஒரு சர்ச்சை வரும்போது, “எங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது” என்ற ரீதியில் பதில் அளிப்பது எப்படி சரியாக இருக்கும்? என கொதிக்கிறார்கள் மாற்று கட்சியினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை போல, தமிழகத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவேன் என்று பேசுகிறார் கமல். அவர் சொல்லுவதை போல மகாராஷ்டிரம் 1 ட்ரில்லியன் டாலர் பொருளதாரத்தை அடையவில்லை. கோவையும் மிக மோசமான நிலையிலும் இல்லை. ஏற்கெனவே, பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டிருந்த கோவையை, மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதனால், வளர்ச்சி சற்று தடைப்பட்டுள்ளது. கோவையின் அடையாளங்களாக உள்ள குறு, சிறு நிறுவனங்கள் தொடர்ந்து நசுங்கிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம், ஆட்சியாளர்கள் காலடி படாமல், சுகாதாரம், அடிப்படை தேவைகள் இல்லாமல் அவதிப்படும் மக்களும் கோவையில் இருக்கின்றனர். இந்த சிக்கல்களை புரிந்து கொண்டு சரி செய்வதில்தான் சவால் உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுப்போம் என்று நான்தான் சொன்னேன்.
அதைப் பார்த்து இவர்களும் (தி.மு.க, அ.தி.மு.க) 1,000, 1,500 கொடுப்பேன் என்று ஏலம் விட்டு கொண்டிருக்கின்றனர். நான் அவர்களின் திறமைக்கு ஏற்ப, திறன்மேம்பாட்டு பயிற்சி கொடுத்து மாதம் ரூ.15,000 வரை ஊதியம் வர வழிவகை செய்வேன். இலவசங்களை கொடுக்கவே மாட்டேன். அதன் மூலம் கடன்சுமைதான் ஏற்படும்” என்றார் கமல்.
ஆனால், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.3,000 கொடுப்போம் என்கிறார். அதேபோல, வீடுகள் தோறும் கணினி வழங்குவோம் என்கிறார். இவையெல்லாம் இலவச பட்டியலில் வராதா?. இதனால், கடன்சுமை ஏற்படாதா?. 1,000, 1,500 என்ற ஏலத்தில் மக்கள் நீதி மய்யம் 3,000 என்று ஏலத்தில் வந்து நிற்கிறது. வாஷிங் மெஷினுக்கு பதிலாக கணினி, 1,000,1500-க்கு பதிலாக 3,000. நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு.
இதில், மற்ற கட்சிகளுக்கும், மய்யத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது?. இந்த மாறுபட்ட பேச்சு, குளறுபடி திட்டங்கள் போன்றவற்றால் கமல் எதிர்பார்க்கும் படித்தவர்களின் வாக்காளர்களின் ஆதரவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். கமலின் வருகைக் குறித்து மக்கள் பரவலாக வரவேற்று பேசினாலும், இதை எல்லாம் சரி செய்யாமல் அந்த வரவேற்பை தக்க வைக்க முடியாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2P7Drg5
via
