ஒரத்தநாடு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய வைத்திலிங்கம், இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், தன் அரசியல் எதிர்காலத்தை நிலை நிறுத்தப் போகும் தேர்தலான இதில் சில கணக்குகளை போட்டு களம் காணும் வைத்திலிங்கத்தின் முன் ஏகப்பட்ட சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றை சமாளித்து கரை சேர்வாரா என்பது தான் அ.தி.மு.கவினர் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைத்திலிங்கம், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் மீண்டும் களம் காண்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக வலம் வந்தவர், ஜெயலலிதாவின் கண்ணசைவை வைத்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அதனை கச்சிதமாக செய்து முடித்ததால் ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையை பெற்றவராக இருந்தார்.
டெல்டா மாவட்ட கட்சியினரால் சோழமண்டல தளபதி என அன்பாக அழைக்கப்பட்டார். இந்நிலையில் 2016 சட்டமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தி.மு.க வேட்பாளரான ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார்.இது வைத்திலிங்கத்தை மட்டுமல்ல அ.தி.மு.கவினரையும் அதிர்ச்சி கொள்ள வைத்தது. ஒரத்தநாட்டிற்கு பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தேன் ஆனாலும் மக்கள் எனக்கு தோல்வியை தந்து விட்டனர் என புலம்பிய வைத்திலிங்கம் அப்போது இரண்டு நாட்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். அது வரை வைத்திலிங்கத்தின் காலையே சுத்தி வந்த முக்கிய நிர்வாகிகள் சிலரும் இனி வைத்திலிங்கம் கதை முடிஞ்சு போச்சு என அவரை சந்திப்பதை தவிர்த்தனர்.
அப்போது ஜெயலலிதாவிடமிருந்து போன் வர என்னமோ, ஏதோவென பதறியடித்துக் கொண்டு சென்னை சென்றவரை, `கவலை படாதீங்க வைத்தி. நான் இருக்குற வரை உங்களை கைவிட மாட்டேன்’ எனக் கூறி உடனடியாக ராஜ்யசபா எம்.பி பதவியை கொடுத்தார். வைத்தி மீது ஜெயலலிதா காட்டிய அக்கறையைக் கண்டு அவரை தவிர்த்தவர்கள் எல்லாம் மீண்டும் அவர் பின்னால் படையெடுக்கத் தொடங்கினர். தோல்விக்கு பிறகு இனி தன் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என வைத்திலிங்கம் நினைத்திருந்த போது மீண்டும் அரசியல் வாழ்விற்கான விளக்கை ஜெயலலிதா ஏற்றி வைத்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க-வின் முதற்கட்ட தலைவர்கள் பட்டியலில் வைத்திலிங்கம் இருக்கிறார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பல சவால்கள் முஷ்டியை முறுக்கிக் கொண்டு அவர் முன்னே நிற்கிறது. ஒரு வேளை தோல்வியை தழுவினால் இந்த முறை கை தூக்கி விட ஜெயலலிதாவும் இல்லை. மாறாக அரசியலில் வைத்திலிங்கம் கதையை முடிக்க ஒரு குள்ள நரிக்கூட்டமே அவரை சுற்றி கொண்டிருப்பதாக அ.தி.மு.கவினரே பேசி வருகின்றனர். தனக்கு எதிராக வரும் பந்துகளை தடுத்து சமாளித்து வைத்தி கரைசேருவாரா என்பதை அறிய ஒரத்தநாடு தொகுதிக்குள் வலம் வந்தோம்.
விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசியதிலிருந்து,``ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக இருந்த வைத்திலிங்கத்திற்கு சசிகலா குடும்பத்தின் ஆசியும் இருந்ததால் ஜெயலலிதாவால் 2001 தேர்தலில் முதல் முறை வாய்ப்பு வழங்க்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றியும் பெற அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதன் பின்னர் 2006,2011 என ஹாட்ரிக் வெற்றி, அரசியலில் அவருக்கு ஏறுமுகத்தைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் 2016 தேர்தலில் தான் தோல்வியடைவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் மக்களிடையே எளிமையாக பழகிய தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். பணபலம் மக்கள் பலத்திற்கு முன் எடுபடவில்லை என தி.மு.க-வினர் கமெண்ட் அடித்தனர். இதையடுத்து வைத்திலிங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் எதையும் சட்டை செய்யாமல் வழக்கம் போல் கட்சிப் பணியினை மேற்கொண்டு வந்தார்.
இதையடுத்து 5 வது முறையாக சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளார். கடந்த முறை அடைந்த தோல்வி கற்றுக் கொடுத்த பாடத்தின் மூலம் ஏன் தோற்றோம் என்பதை கள ஆய்வு செய்து அதனை களைத்து உற்சாகமாக களத்தில் சுழன்று வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே ஏன் தோற்றோம் என்பதை அறிய தனியாக டீம் அமைத்து ஆய்வு செய்தார். அத்துடன் தனக்கு எதிராக உள்ளடி வேலை செய்த கட்சி நிர்வாகிகள் பற்றியும் விசாரணை மேற்கொண்டு பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார்.
தொகுதி முழுவதும் மக்களிடம் கருத்துக் கேட்டத்தில், அவர்கள் ஒரு சேர சொன்னது, ` நீங்க ஒன்றிய செயலாளராக இருக்கும் போது மக்களோடு மக்களாக இருந்தீங்க ஆனால் இப்போது மக்களிடமிருந்து விலகி நிற்கிறீங்க. உங்களை பார்க்க வேண்டும் என்றால் கூட எளிதாக பார்த்து விட முடியாது.ஒரு சில நிர்வாகிகளை சந்தித்த பிறகே உங்களை பார்க்க முடியும் என்ற நிலையிருக்குது. இவையெல்லாம் உங்களுக்கு எதிரான மன நிலையை உண்டாக்கி விட்டது. கட்சியின் கிளை செயலாளர்களை நீங்க சந்திக்க தவறி விட்டீர்கள்’ என வரிசையாக பட்டியலிட்டுள்ளனர் மக்கள். தனி டீம் ஒன்று இதனை வைத்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றது. கடந்த தேர்தலின் போது அம்மா எனக்கு நிறைய பொறுப்புகளை கொடுத்திருந்தார் அதனால் நான் என் தொகுதியை கவனிக்கத் தவறிவிட்டேன்.
ஆனால் இந்த முறை அது போன்று நடக்காது என தொகுதி முழுவதும் உருக்கமாக பேசி வருகிறார். இதே போல் கட்சியின் கிளை செயலாளர்கள் அனைவரையும் சந்தித்து `நீங்க எனக்கு மட்டுமல்ல கட்சிக்கும் ஆணி வேர்’ என சென்டிமெண்டாக பேசி அனைவரது செல் நம்பர்களையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அதனை தனது பி.ஏ-விடம் கொடுத்து இந்த டைரி எப்போதும் கையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். திடீரென கிளை செயலாளர்களுக்கு போன் செய்து நான் வைத்தி பேசுறேன் என இன்ப அதிர்ச்சி கொடுப்பதுடன், கள நிலவரத்தை அறிந்து கொள்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கிளை செயலாளர் தொடங்கி நிர்வாகிகள் வரை வைட்டமின் `ப’வை வாரி இரைத்து உற்சாகமாக வைத்திருக்கிறார். தனக்கான தேர்தல் பணி செய்யும் குழுவிடம் சில நிர்வாகிகளின் பெயர் பட்டியலை கொடுத்து இவங்களை நம்பாதீங்க நமக்கு எதிரா உள்ளடி வேலை செய்வாங்க என்றும் எச்சரித்துள்ளார்.
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள 58 பஞ்சாயத்துக்களில் உள்ள முத்தரையர் சமூக மக்களை தனியாளாக சந்தித்து `உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன்’ என கையை பற்றிக் கொண்டு பேசியிருக்கிறார். தனக்கு எதிராக நின்ற அதிருப்தியாளர்களை சரி கட்டிவிட்டார். கட்சி ஆலோசனை கூட்டம் ஒன்றில் மாவட்ட மாணவரரணி செயலாளரான காந்தியிடம்,` எல்லோரும் சேர்ந்து என்னை அழிச்சது பத்தாதா’ என வெளிப்படையாக கத்தியுள்ளார். தான் தனி நபருக்கான ஆள் கிடையாது, கட்சியினர் எல்லோருக்கும் பொதுவானவன் என்பதை உணர்த்தவே பொதுவெளியில் அவர் அப்படி பேசியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் நான் நெனச்சா, ` எட்டு தொகுதியில எந்த தொகுதியில வேணுமானாலும் போட்டியிடலாம் ஆனா என் சொந்த ஊர்,சொந்த தொகுதியான இங்க போட்டியிடத்தான் நான் விரும்புறேன்.
நீங்க கடந்த முறை எனக்கு கொடுத்த தண்டனையை முழுசா அனுபவிச்சுட்டேன். 20 வருசத்துக்கு பிறகு செய்ய வேண்டியதை இப்பவே தொகுதிக்கு செய்து கொடுத்திருக்கேன். தமிழ்நாட்டிலேயே பேரூராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது இங்க மட்டும் தான். வேற எங்கையும் இல்ல. தொகுதிக்கு இன்னும் செய்ய காத்திருக்கேன். எல்லோரும் அண்ணே நாம வேறு தொகுதியில் போட்டியிடலாம்னு சொன்னாங்க. நான் என்னோட தொகுதியிலிருந்தே எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படனும்னு சொல்லி தவிர்த்துட்டேன். எல்லாம் உங்க கையில தான் இருக்கு’ என கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியிருக்கிறார். தேர்தல் பணிகளை மூத்த மகன் பிரபு, சம்மந்தி தவமணி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு அ.ம.மு.க பெரிய மைனஸாக இருக்கும் என கள நிலவரத்தை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்டா மாவட்டத்திலேயே அ.ம.மு.க பெரும் பலத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது ஒரத்தநாட்டில். அதனால் தான் தினகரன் இத்தொகுதி மீதும் ஒரு கண் வைத்திருந்தார். மாவட்ட செயலாளரான மா.சேகர் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெருமளவிலான இளைஞர்களை ஈர்த்துள்ள சேகர் தனிபட்ட முறையில் மக்கள் செல்வாக்குடன் வலம் வருபவர். சமீபத்தில் மா.சேகர் மகள் திருமணம் டி.டி.வி தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. இதனை ஒரு மாநாட்டினை போல் நடத்தியதை பார்த்து தினகரன் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரும் மெர்சல் ஆனார்கள். அ.தி.மு.கவில் இருந்த போதே மா.சேகர் வளர்ந்து விடக் கூடாது என வைத்திலிங்கம் செயல்பட்டதால் இருவருக்கும் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் இருந்தன.
அதை மனதில் வைத்திருந்த சேகர் கடந்த முறை வைத்திலிங்கம் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எப்படியும் எம்.எல்.ஏ ஆகி விட வேண்டும் என சேகர் தன் சக்தி முழுவதையும் தொகுதிக்குள் கொட்டி சில ஆண்டுகளாக உழைத்து கொண்டிருப்பதும் வைத்திக்கு பின்னடைவை உண்டாக்கும். தி.மு.கவைச் சேர்ந்த புல்லட் ராமச்சந்திரன் என அழைக்கப்படுகிற எம்.ராமச்சந்திரன் வைத்திலிங்கத்தை தோற்கடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரே இந்த முறை களத்தில் போட்டியிடுகிறார். பதவியில் இருந்தாலும் இல்லாவிடிலும் தொகுதி மக்களுடன் நெருங்கி இருக்க கூடியவர். எளிமையானவர் என பெயரெடுத்த புல்லட், நேர்காணலின் போது எனக்கு சீட் கொடுங்க ஒரத்தநாடு நமக்கு தான் என சொல்ல ஸ்டாலின் கலகலப்பாகி விட்டாராம்.
வைத்திலிங்கத்தை தோற்கடித்த அதே அடையாளத்தோடு எம்.ராமச்சந்திரன் பிரச்சார பணிகளை மேற்கொள்ள புல்லட்டில் புழுதி பறக்க கிளம்பி விட்டார். இத்தனை சவால்களையும் சமாளித்து கரை சேருவாரா வைத்திலிங்கம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
வைத்திலிங்கம் தரப்பிலோ, ``இது வரை இருந்த மைனஸ்கள் அனைத்தையும் பிளஸ் ஆக்கிவிட்டோம். இப்போது வைத்திலிங்கம் பொறுப்பில் உள்ள தொகுதிகளில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து அவர்களின் வெற்றிக்காக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் பிறகு ஒரத்தநாட்டில் முழு வீச்சில் கவனம் செலுத்துவார்.பல திட்டமிடல்கள்,சில கணக்குகள் இந்த முறை அண்ணனுக்கு ஜெ போட வைக்கும்” என நம்பிக்கையுடன் கூறினர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/30LQNRC
via
