சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க-வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகளில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ தலைமையிலான கட்சி நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
Also Read: நெல்லை: `துரை வையாபுரி எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டார்’ - வைகோ திட்டவட்டம்
எந்தெந்த தொகுதிகள் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என கூட்டணிக் கட்சியை வலியுறுத்துவது பற்றியும் அதில் யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள்.
தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் ம.தி.மு.க-வுக்கு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியும் ஒதுக்கப்படக் கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் சாத்தூர் அல்லது கோவில்பட்டி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்பது கட்சியினர் விருப்ம்புகின்றனராம். கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் இதைக் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய கட்சியின் நிர்வாகி ஒருவர், “தி.மு.க கூட்டணியின் வெற்றிக்காகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக வைகோ வியூகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார். இதற்காக தொடர் பிரசார கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், சாத்தூர் அல்லது கோவில்பட்டி தொகுதியில் துரை வைகோ போட்டியிட விரும்புகிறார். கட்சி நிர்வாகிகளும் அதையே விரும்புகிறோம். ஆனால் வைகோவுக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.
1993-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, ’கட்சியில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தவே என்னை வெளியேற்றியிருக்கிறார்கள்’ என்று வைகோ தெரிவித்தார். வாரிசு அரசியலை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவந்தால் தன் மீது களங்கம் ஏற்படும் என வைகோ நினைக்கிறார்.
அதனால் தன் மகன் துரை வைகோ கட்சியில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்திருக்கிறார். ஆனால், இந்த முறை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள சூழல் நன்றாக இருப்பதால் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை வைகோவிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்கிறார்கள்.
தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பம் நிறைவேறுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2OdGsLL
via
