''சிவசாமியை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி... நீங்கள் எனக்கு நண்பன், துணைவன், சகோதரன்!'' - தனுஷ்

0

இந்தியாவின் சிறந்த நடிகராக 'அசுரன்' படத்துக்காக தேசிய விருது வென்ற தனுஷ் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது லாஸ் ஏஞ்சலீஸில் தங்கியிருக்கும் தனுஷுக்கு, நேற்று மாலை தேசிய விருது அறிவிக்கப்பட்ட நேரம் நள்ளிரவு நேரம் என்பதால் அவரை யாராலும் உடனடியாகத் தொடர்புகொள்ளமுடியவில்லை. இந்நிலையில் தன்னுடய மகிழ்ச்சியை, நன்றியை அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் பகிர்ந்திருக்கிறார் தனுஷ்.

''அசுரனுக்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருதை வெல்வது என்பதே கனவு. ஆனால், இரண்டு தேசிய விருதுகளை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்தளவுக்கு வருவேன் என கற்பனைகூட செய்ததில்லை.

நிறைய பேருக்கு நன்றி சொல்லவேண்டியிருக்கிறது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய குருவான அண்ணனுக்கு நன்றிகள்.

தனுஷ் - அசுரன்

'சிவசாமி'யை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

வெற்றிமாறன், பாலுமகேந்திரா சாரின் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகப் சந்தித்தபோது நீங்கள் என் நண்பனாக, துணைவனாக, சகோதரனாக மாறுவீர்கள் என நினைத்துக்கூடப்பார்க்கவில்லை. உங்களின் இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்ததற்காகவும், இரண்டு படங்கள் உங்களோடு சேர்ந்து தயாரித்ததற்காகவும் பெருமைப்படுகிறேன்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவிடமுடியாதது. அடுத்து எனக்காக என்ன கதை எழுதியிருக்கிறீர்கள் என்கிற பேரார்வத்தில் உங்கள் செய்திக்காக காத்திருக்கிறேன்'' என்று அறிக்கையில் சொல்லியிருக்கிறார் தனுஷ்.

மேலும், 'வா அசுர வா' இசையமைத்தற்தாக ஜி.வி.பிரகாஷுக்கும் நன்றி தெரிவித்திருக்கும் தனுஷ், வழக்கம்போல தன்னுடைய பன்ச்லைனான ''எண்ணம்போல் வாழ்க்கை'' என்பதுடன் அறிக்கையை முடித்திருக்கிறார்.



from தமிழ் சினிமா https://ift.tt/2QqB0pr
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*