தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பிடித்திருக்கும் விஜய்யின் அடுத்தப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. கொரோனா பிரச்னைகளுக்கு இடையேயும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'மாஸ்டர்' படத்துக்கு அடுத்தபடியாக விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கி ரிலீஸுக்கு காத்திருக்கும் படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படம் வரும் மார்ச் 26-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகயிருக்கிறது. அதனால் விஜய் #Vijay65 படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் இரண்டாம் வாரம் அதாவது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் தொடங்குகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பது என்பதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டேயிருந்தது. சம்பளப் பிரச்னை காரணமாக இழுபறி நீடித்துவந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இவர் தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர். 2012-ம் ஆண்டு நடந்த இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜய்தான் பாடல்களை வெளியிட்டார். 'முகமூடி'க்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கில் பிஸியாகிவிட்டார்.
பூஜா ஹெக்டே அதிக சம்பளம் கேட்டதால் தொடர்ந்து சன்பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டேயிருந்தது. இறுதியில் ஷூட்டிங் தேதி நெருங்கிவிட்டதோடு, தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் பூஜா ஹெக்டேவை 3.5 கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.
விஜய் 65 படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறதாம். ஒரேயொரு போர்ஷன் மட்டும் வெளிநாட்டில் படம்பிடிக்கயிருக்கிறார்கள். சென்னை படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தப்பிறேகே வெளிநாட்டில் ஷூட்டிங் நடக்குமாம். கொரோனா பிரச்னையைக் காரணம் காட்டி அதிக தொல்லை தராத நாட்டைப் பிடப்பிடிப்புக்காகத் தேடிவருகிறார்கள்.
'மாஸ்டர்' வெற்றி, கொரோனா பிரச்னையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தவிட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம் விஜய். தமிழக தேர்தல் நிலவரத்தை மிகுந்த ஆர்வத்தோடு தொடர்ந்து கவனித்துவரும் விஜய், ஒவ்வொரு கட்சியின் பிரசார வியூகங்கள் எப்படியிருக்கிறது என்பது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் நண்பர்களிடம் அலசிவருகிறாராம்.
அரசியலில் இறங்கவேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட விஜய், இந்த தேர்தலை மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறார் என்கிறார்கள்.
from தமிழ் சினிமா https://ift.tt/384ICEm
via
