வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதிக்குட்பட்ட மெட்டுக்குளம் பகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் ராமுவின் நெருங்கிய தரப்புக்குச் சொந்தமான ரெஸ்டாரண்ட் ஒன்று லாட்ஜுடன் செயல்பட்டுவருகிறது. இந்த லாட்ஜில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்கான வேலைகள் நடந்துவருவதாக நள்ளிரவு 1 மணியளவில் தேர்தல் அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறை உதவியுடன் அந்த லாட்ஜை சுற்றி வளைத்து அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கிருந்த 8 பேர் கும்பல் அலுவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் எச்சரிக்கைக்குப் பின்னர் அந்த கும்பல் அமைதியானது. சோதனையில் 18,41,300 ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. இந்தப் பணம் முழுவதுமே 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன.
அதோடு, அ.தி.மு.க வேட்பாளர் ராமுவின் படம் மற்றும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் போன்றவையும் இருந்தன. பணத்துடன் மொத்த ஆவணங்களையும் கைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள், இதுதொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அதன்பேரில், பிடிபட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வாக்காளர்களுக்கு பணம் தர முயற்சித்தல், அலுவலர்களை மிரட்டியது உட்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அ.தி.மு.க வேட்பாளர் ராமு மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fC1OxM
via
