``தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3559 வேட்பாளர்களில் 466 பேர் மீது, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன'' என்ற தகவலை தன்னார்வ அமைப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை `சோக்கோ' அறக்கட்டளை நிர்வாகிகள் மகபூப் பாட்சா, செல்வகோமதி முன்னிலையில் நீதியரசர் கிருஷ்ணய்யர் அரங்கில் நடந்த நிகழ்வில் வேட்பாளர் விவரங்களை வெளியிட்டு பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், ``தற்போது நடைபெறும் தேர்தலில் 202 தேசியக்கட்சி வேட்பாளர்கள், 489 மாநிலக் கட்சி வேட்பாளர்கள்,1001 பதிவு பெற்ற அங்கீகாரம் பெறாத கட்சி வேட்பாளர்கள், 1867 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில் 3,559 வேட்பாளர்களில் 466 பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில் இது 13 சதவிகிதமாகும்.
அதில் 207 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில், தி.மு.க-வில் போட்டியிடும் 178 பேரில் 136 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இது அவர்களின் வேட்பாளர்களில் 76 சதவிகிதமாகும். அ.தி.மு.க-வில் 191 வேட்பாளர்களில் 46 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இது 24 சதவிகிதமாகும்.
பா.ஜ.க-வின் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் 75 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 21 பேரில் 15 பேர் மீது வழக்கு உள்ளதால் 71 சதவிகிதமும், தே.மு.தி.க-வில் 30 சதவிகிதமும், பா.ம.க-வில் 44 சதவிகிதம் என குற்ற வழக்கு உள்ள வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் உட்பட 7 பேர் மீது கொலை வழக்கும், ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது." என்றனர்.
வேட்பாளர்களின் சொத்து மற்றும் கடன், கல்வித்தகுதி, வயது, பாலின விவரத்தையும் வெளியிட்டார்கள்.
மேலும், ``கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் போன்ற கொடுமையான குற்றங்களுகாக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்களை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யவேண்டும். பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளிக்கும் வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" போன்ற பரிந்துரைகளையும் இவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2PWEvUA
via
