தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க மகளிரணி மாநிலச் செயலாளருமான கனிமொழி தேனி வந்திருந்தார். போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
Also Read: தேனி - திண்டுக்கல் - புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு
அப்போது பேசிய கனிமொழி, தி.மு.க தேர்தல் அறிக்கையின் சிறப்புகளையும், ஓ.பன்னீர்செல்வத்தை தாக்கியும் பேசினார். மேலும், ``அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க, எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவுகிறது. அரவக்குறிச்சியில் ஒரு வேட்பாளர் இருக்கிறார். பேர் அண்ணாமலைனு வச்சுகிட்டு, அவரு ரஜினிகாந்த்னு நினைச்சுட்டார் போல.
தொகுதியில் பிரசாரம் செய்யும் போது, ’எனக்கு இன்னொரு முகம் இருக்கு.! அந்த முகத்தை காட்ட வைத்துவிடாதீர்கள். செந்தில் பாலாஜியை நான் அடித்துவிடுவேன்.’ என்று பேசியிருக்கிறார். நீ தொட்டுப் பாரு தம்பி. தி.மு.க காரங்க மேல கை வச்சுப் பாரு. அதுவும் பி.ஜே.பி.! உங்களப் போல நாங்க எத்தன பேர பாத்துட்டு வந்திருப்போம். தி.மு.க உடன்பிறப்புகளை யாரும் மிரட்டிவிட முடியாது. நாங்க எழுந்து நின்றால் தாங்கமாட்டீங்க. அதனால, இந்த வேலையெல்லாம் தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ள வேண்டாம். நீங்க வெற்றிபெற்ற ஊரில் எல்லாம் பொறுத்துக்கொண்டார்கள். சகித்துக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் அதற்கான இடமில்லை. இந்த மிரட்டல் எல்லாம் இங்கே வேண்டாம். நாகாக்க வேண்டும்.” என்றார்.
Also Read: தேனி: வேட்பாளர்களுக்கு கறுப்புக் கொடி; அதிமுக வாக்கு வங்கியை உடைக்குமா சீர்மரபினர் நலச்சங்கம்?
முன்னதாக, அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை பிரசாரம் செய்ய விடாமல் இடையூறு செய்யும் விதமாக தி.மு.க’வினர் நடந்துகொள்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டியதோடு, ’செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன்.!’ என பேசினார். அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பதில் கொடுக்கும் விதமாக, தேனி பிரசாரத்தில் கனிமொழி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mlwGUr
via
