தளர்வில்லாத முழு ஊரடங்கில் மக்களின் சிரமத்தை குறைக்க குடியிருப்புகளுக்கே வந்து குறைந்த விலையில் காய்கறி தொகுப்பு விற்பனை செய்யும் பணியில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் கடந்த 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உணவுக்கான காய்கறிகளை கடந்த 23-ம் தேதி பத்து மடங்கு விலையேற்றத்துடன் விற்பனை செய்யபட்டது.
இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வாங்க முடியவில்லை. இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைத்துறை, உழவர் குழுக்களை ஒருங்கிணைத்து மதுரை மாநகராட்சி நிர்வாகம் காய்கறி விற்பனையை தொடங்கியுள்ளது.
அது மட்டுமில்லாமல் காய்கறி மொத்த வியாபாரிகளிடமும் இந்த சேவைக்காக குறைந்த விலையில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தக்காளி, வெங்காயம்,தேங்காய், வெண்டைக்காய், அவரைக்காய்,உருளைக் கிழங்கு, சவ்சவ், கத்திரிக்காய், பச்சை மிளகாய், மல்லி இலை, கறிவேப்பிலை அகிய காய்கறிகள் அடங்கிய பை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று தொடங்கிய காய்கறி விற்பனை, இன்று மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் 100 வாகனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டும் இதேபோல் காய்கறி, பழ விற்பனையை சிறப்பாக செய்தது மாநகராட்சி நிர்வாகம். விற்பனை செய்யும் பணியில் பல தன்னார்வலர் அமைப்பினர் இணைந்துள்ளனர்.
விலை குறைவாக தருவதற்கு வியாபாரிகள் முன்வந்தால் இதே விலைக்கு இன்னும் கூடுதலாக காய்கறிகள் வழங்க முடியும் என்கிறார்கள் மாநகராட்சி நிர்வாகத்தினர். மாநகராட்சியில் செய்யப்படுவதுபோல மாவட்ட அளவில் செய்யவும் விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3hNYeSd
via
