கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் கட்சி தலைமையிலான ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் எல்.டி.எஃப் கூட்டணி வென்றது. மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி வென்றது. கடந்த தேர்தலில் ஒரு சீட் பெற்ற பா.ஜ.க இந்த முறை அந்த சீட்டையும் பறிகொடுத்தது. கடந்த மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில் எல்.டி.எஃப் கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட முதல்வர் பினராயி விஜயன் சிகப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய கேக்-கை வெட்டினார். இதில் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எல்.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 21 அமைச்சர்களுடன் வரும் 20-ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து எல்.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சி.பி.எம் கட்சிக்கு 12 அமைச்சர்களும், சி.பி.ஐ-க்கு 4, ஜனதாதள் எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு அமைச்சர் வீதமும் வழங்கப்படும். பாக்கி உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் மீதமுள்ள நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும். மொத்தமுள்ள 21 அமைச்சர்களுக்கான துறை குறித்து முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார்.
சபாநாயகர் பதவி சி.பி.எம்-க்கும், துணை சபாநாயகர் பதவி சி.பி.ஐ-க்கும் வழங்கப்படும்" என்றார். இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கும் பினராயி விஜயனின் அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான இந்திரா பவனில் வைத்து நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஹைகமாண்ட் பிரதிநிதி மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்கிறார். அவர் ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களாக தனித்தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை எதிர்கட்சி தலைவராக இருந்த ரமேஷ் சென்னித்தலா மீண்டும் அதே பதவிக்காக காய்நகர்த்தி வருகிறார். எம்.எல்.ஏ வி.டி.சதீசன், திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அடிபோடுவதால் காங்கிரஸில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uTkWvV
via
