சாத்தூர்: மூச்சு திணறல்; கொரோனா அறிகுறி! - முதியவரை தானே மருத்துவமனை அழைத்துச் சென்ற துரை வைகோ

0

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம், சத்திரப்பட்டி, படந்தால், சாத்தூர் ஆகிய 5 இடங்களில் ம.தி.மு.க சார்பில் 'கொரோனா பேரிடர் விழிப்புணர்வு தகவல் மையங்கள்' அமைக்கப்பட்டுள்ளன. வைகோவின் மகன் துரை வைகோ மேற்பார்வையில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவரின் கண்காணிப்பில் இயங்கும் இந்த மையங்களில் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்களில், கோரோனா அறிகுறிகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான மருத்துவமனைகளை பரிந்துரைப்பது, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா பேரிடர் விழிப்புணர்வு தகவல் மையத்தின் சார்பாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. அதனால் அவசர காலத்தில் உள்ள நோயாளிகளை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் அழைத்துச் செல்கின்றனர். வைகோவின் மகன் துரை வைகோ இந்த மையத்தில் தன்னார்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

சத்திரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று துரை வைகோ பார்வையிட்டார். அப்போது அந்த மையத்துக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சிறைப்புடன் கொரோனா அறிகுறியோடு முதியவர் ஒருவர் வந்தார். சத்திரப்பட்டி அருகே உள்ள அய்யனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலராஜ் என்ற 67 வயது முதியவரான அவர் மூச்சுவிடவே சிரமப்பட்டார்.

உடனடியாக கவச உடையணிந்த துரை வைகோ, தானே அந்த முதியவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியதுடன் அங்கிருந்த மருத்துவரின் உதவியோடு செயற்கை சுவாசத்துக்கு வழி செய்ததுடன் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். அந்த முதியவருடன் துரை வைகோ ஆம்புலன்ஸில் பயணம் செய்து மருத்துவமனையில் சேர்த்தார்.

துரை வைகோவின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தின்போது இந்தப் பகுதி மக்களிடம் பேசிய துரை வைகோ, 'எங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைத்தால் உங்களுக்குத் தேவையான உதவிகளை நானே நேரில் நின்று செய்வேன்' என்றார்.

Also Read: தேர்தலில் போட்டியிட துரை வைகோ விருப்பமா? - வாரிசு அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா வைகோ?

சாத்தூர் தொகுதியில் ம.தி.மு.க வேட்பாளர் ஜெயித்துவிட்டதால் வாக்குறுதிகளை நிறைவேற்று வகையில், கொரோனா பேரிடர் விழிப்புணர்வு தகவல் மையங்களை அமைத்து எங்களுக்கு உதவிகளைச் செய்கிறார். இது வெறும் தகவல் மையமாக மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளனவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவும் உதவுறாங்க.

வைகோவுடன் துரை வைகோ

கொரோனா பாதிப்பால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் கிடைக்க வழிசெய்கிறார்கள். அவர்களுக்கு மருந்துப் பொருள்கள் தேவை என்றாலும் வீடுகளுக்கே சென்று கொடுக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட முதியவருடன் அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இன்று துரை வைகோ பயணம் செய்து அவருக்கு சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RTXTCx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*