லைகாவுடன் சமாதானம்... மீண்டும் `இந்தியன்- 2' படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கமல்ஹாசன்!

0

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தத் திரைப்படம் 'இந்தியன்'. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தப் படத்தின் பார்ட் 2 எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 2017 பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் வைத்து இதனை அறிவித்தார் கமல்ஹாசன். இந்த அறிவிப்பின்போது இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமாகப்போவதாக தில் ராஜு வெளியேற, சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் 'இந்தியன் - 2' படத்தைத் தயாரிக்க முன்வந்தது.

2017-ல் அறிவிக்கப்பட்ட 'இந்தியன் -2' படத்தின் ப்ராஜெக்ட், ஷங்கர் '2.0' படத்தில் பிஸியாக இருந்ததால் தள்ளிக்கொண்டேபோனது. இதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு 2019 ஜனவரி இறுதியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், மறைந்த நடிகர் விவேக், சமுத்திரக்கனி எனப்பலரும் நடித்தார்கள்.

இந்தியன்-2
ஆனால், 'இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே பஞ்சாயத்துதான். கடந்த ஆண்டு ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்புகள் இருவருக்குமான மோதலை இன்னும் அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இரவு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் 'இந்தியன் - 2' படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக க்ரேன் விழுந்ததில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இந்நிலையில் விபத்துக்குக் காரணம் லைகா நிறுவனத்தின் அலட்சியம்தான் என குற்றம்சாட்டியிருந்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். இதுகுறித்து கடிதம் ஒன்றையும் லைகா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரனுக்கு அனுப்பியிருந்தார்.

இதற்கான பதில் கடிதத்தை லைகா நிறுவனத்தின் இயக்குநர் நீல்காந்த் நாராயண்புர் என்பவர் கமல்ஹாசனுக்கு எழுதியிருந்தார். அதில் ''பிப்ரவரி 19-ம் தேதி இரவு ஏற்பட்ட விபத்து யாரும் எதிர்பாராதது. சர்வதேச அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் துரதிஷ்டவசமாக இதுபோன்ற விபத்து நிகழ்ந்தது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு கூட்டாக நாம் எல்லோரும் சேர்ந்துதான் பொறுப்பேற்க வேண்டும். நடந்த தவற்றை சரிசெய்யவேண்டும். மிகப்பெரிய அனுபவசாலியும், மிகத்தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநருமான நீங்களும், மூத்த இயக்குநரான ஷங்கரும் களத்தில் இருந்து வழிநடத்தும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச்சரியாக இருக்கும் என நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். உங்கள் இருவரின் தலைமையில்தான் இதுவரையிலான ஷூட்டிங் நடந்தது என்பதையும் நினைவுபடுத்தத் தேவையில்லை.

இந்தியன் - 2

நீங்கள் (கமல்ஹாசன்) மருத்துவமனைக்கு வந்துபோன 15-வது நிமிடத்தில் மருத்துவமனைக்கு சுபாஸ்கரனும், லைகாவின் மூத்த நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். நிவாரணத்தொகை குறித்த அறிவிப்பு வெளியானதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கான உதவிகளும் அளிக்கப்பட்டன. இவை எல்லாமே உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பாகவே செய்யப்பட்டவை. இருந்தும் இவை உங்கள் கவனத்துக்கு வரவில்லை என்பது துரதிஷ்டவசமானது'' என்று வெளிப்படையாக கமல்ஹாசனுக்கு, லைகா பதில் கடிதம் எழுதியிருந்தது சினிமா உலகுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கும், லைகா நிறுவனத்துக்குமான பிரச்னை இன்னும் பெரிதானது. அதற்குள் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் புதிதாக 'விக்ரம்' படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் கமல்ஹாசன். இந்தப் படத்துக்கான வீடியோ டீசரும் வெளியானது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் சில வாரங்களுக்கு முன்பு 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இருப்பதாக அறிவித்தார். உடனடியாக நீதிமன்றப் படி ஏறியது லைகா.

கமல்ஹாசன்

''ஏற்கெனவே ஷங்கருக்குப் பாதி சம்பளம் கொடுத்துவிட்டோம். படப்பிடிப்பும் முக்கால்வாசி முடிந்துவிட்டது. அதனால் இந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டுத்தான் ஷங்கர் அடுத்தப் படத்துக்குப்போக வேண்டும்'' என நீதிமன்றத்தில் வழக்குப்போட்டது லைகா. இப்போது நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னையைப் பேசி முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டிருப்பதால், கமல்ஹாசன் மற்றும் ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது லைகா.

இதில் கமல்ஹாசன் 'இந்தியன் -2' படத்தை முடித்துத்தர ஒப்புக்கொண்டிருப்பதோடு, ஷங்கரையும் சமாதானம் செய்திருக்கிறார். அதனால், கொரோனா லாக்டெளன் முடிந்ததும் 'இந்தியன் -2' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இந்தியன் -2' படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு, ரஜினியின் 'அண்ணாத்த' படத்துக்குப்போட்டியாக களமிறக்க திட்டமிட்டிருக்கிறது லைகா.


from தமிழ் சினிமா https://ift.tt/3y1xOSI
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*