தனது இரண்டாவது மனைவி மீது சந்தேகப்பட்ட நபர், அவர்மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரிக்க, அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்துள்ள சம்பவம், உறவினர்களை அதிர வைத்திருக்கிறது. இதனால், முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த போலீஸார், அந்த பெண் இறந்ததால் அவரின் கணவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Also Read: கரூர்: `என் மகன் இல்லாம எப்படி உயிர்வாழ்வேன்?' - மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருக்கிறது தண்ணீர்பந்தல்மேடு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் பால்வண்டி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வர, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது பிறந்த ஊருக்கு தனலட்சுமி சென்று விட்டார். இதனால், முருகேசன் தனியே வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், முருகேசனுக்கு பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூரை சேர்ந்த பரந்தாமன் என்பவரது மனைவி நித்யாவுடன் (வயது 32) பழக்கம் ஏற்பட்டது.
இவர்களது பழக்கம் நாளடைவில் எல்லை மீற, இரண்டு வீடுகளிலும் கண்டித்துள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் உறவினர்களின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டு, தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில், நித்யா அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இது, முருகேசனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அடிக்கடி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. 'யாரோடு பேசுகிறாய்' என்று கேட்டு, நித்யாவை அடித்து வதைத்தாகவும் சொல்கிறார்கள். இதனிடையே, இருவருக்கும் சண்டை அதிகமாக, கடந்த மார்ச் மாதம் 23 - ம் தேதி முருகேசனுக்கும், நித்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, முருகேசன் நித்யாவின் செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்திருக்கிறார். அதோடு, ஆத்திரம் தணியாத முருகேசன், தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை நித்யா மீது ஊற்றி, அவர் தீ வைத்து எரித்தார். இதில், பலத்த காயம் அடைந்த நித்யா, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, நித்யாவின் உறவினர்கள் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸார் முருகேசனை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நித்யா, திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இதனால், பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸார் நித்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, முருகேசன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றியதோடு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது இரண்டாவது கணவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/343PcZf
via
