புதுச்சேரி: ’33 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!’ முடிவுக்கு வந்தது மூன்று வார இழுபறி!

0

புதுச்சேரி மாநிலத்தின் 15-வது சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 26-ம் தேதி பொதுத் தேர்தல் நடைப்பெற்ற நிலையில், அதன் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றதால் 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கொடுத்தார் ரங்கசாமி.

புதுச்சேரி அரசு சட்டப்பேரவை கட்டிடம்

அதையடுத்து துணை முதல்வர், சபாநாயகர் பதவிகளுடன் அமைச்சர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் துணை முதல்வர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் பா.ஜ.கவுக்கு கொடுக்க விரும்பாத முதல்வர் ரங்கசாமி மௌனமாகவே இருந்தார். இருதரப்புக்கும் பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால், மே 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடிவரும் நேரத்தில், மக்கள் பிரதிநிதிகளின் பதவியேற்பும் தாமதமானதால் அதிருப்தியடைந்தனர் மக்கள். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

முதல்வர் ரங்கசாமி

அந்த நேரத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய பா.ஜ.க அரசு நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட, கொதித்துப் போனார்கள் மக்களும், அரசியல் கட்சிகளும். அதனால் ’மக்களின் உயிர்களைவிட பதவிகளைப் பெறுவதில்தான் குறியாக இருக்கிறார்கள்’ என்று கடுமையான விமர்சனத்துக்குள்ளானது பா.ஜ.க.

தொடர்ந்து சிகிச்சை முடிந்து குணமடைந்துவிட்ட முதல்வர் ரங்கசாமி, தங்கள் கட்சியின் எம்.எல்.ஏவான லட்சுமி நாராயணனுக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் தமிழை சௌந்தரராஜனுக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற விழாவில், லட்சுமி நாராயணனுக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன்.

Also Read: புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்களுக்கும், மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனாலும் பா.ஜ.கவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடையேயான அமைச்சர்கள் பங்கீடு இன்னும் முடிவடையாததால், பொதுமக்கள் மத்தியில் அமைச்சரவை எப்போது செயல்படத் துவங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QUAAsc
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*