பொள்ளாச்சி:"6 மருத்துவர்கள்,24 செவிலியர்கள் சம்பளத்தை நான் கொடுக்கிறேன்"-தி.மு.க வேட்பாளர் வரதராஜன்!

0

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. பல தொற்றாளர்கள் ஆக்ஸிஜனுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் உதவியுடன் 100 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் ஒன்று இருக்கிறது.

கொரோனா

Also Read: 4,000 பேருக்கு கொரோனா(?); கொல்கத்தா எண்ணிக்கையை தமிழகத்தில் காட்டிய ஆய்வகம்! - பரிசோதனை உரிமம் ரத்து

ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் இடம் கிடைப்பது கடினமாக இருப்பதால் அந்த 100 படுக்கைகளை வரதராஜன் தத்தெடுத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க வேட்பாளராக களம் கண்டவர் டாக்டர் வரதராஜன். இவர் பொள்ளாச்சி தி.மு.க நகர பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தேர்தலில் இவர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். ஆனாலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் பொள்ளாச்சி மக்களுக்கு கை கொடுத்துள்ளார்.

பொள்ளாச்சி

100 நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக 6 மருத்துவர்கள், 24 செவிலியர்கள், 24 தூய்மை பணியாளர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்தி, அவர்களுக்கான ஊதியப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் வரதராஜன்.

இதுகுறித்து டாக்டர் வரதராஜன் கூறுகையில், “பொள்ளாச்சி மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் மக்கள் கோவைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. கோவையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு மருத்துவராக, மருத்துவத்துறையில் உள்ள அசாதாரண சூழ்நிலையை நேரடியாகப் பார்த்து வருகிறேன்.

கொரோனா

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றியிருப்பதால், அங்குள்ள நண்பர்களிடம் என்ன தேவை என்பதைக் கேட்டறிந்தேன். அவர்கள், ‘எங்களிடம் எல்லாம் இருக்கிறது மேன் பவர்தான் இல்லை’ என்று கூறினார். அதற்கு நான் பொறுப்பு எடுத்துக்கொண்டேன்.

தற்போது கடினமான சூழல் இருப்பதால், அரசு நிர்ணயித்ததைவிட சற்று அதிகளவு சம்பளம் கொடுக்க நினைத்தேன். அரசில் தற்காலிக மருத்துவர்களுக்கு ரூ.65,000 கொடுக்கின்றனர். நாம் அவர்களுக்கு ரூ. 75,000 கொடுக்க உள்ளோம். அதேபோல, செவிலியர்களுக்கு ரூ.25,000, சுகாதார பணியாளர்களுக்கு ரூ.10,000 கொடுக்கிறோம்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

இரண்டு ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுவார்கள். 5 நாள்கள் பணியிலும், 5 நாள்கள் தனிமைப்படுத்துதலிலும் இருப்பர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. இதற்கு எங்கள் கட்சியிலும், என் நண்பர்கள் வட்டாரங்களிலும் உதவி செய்துள்ளனர்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் நாங்கள் செய்ய உள்ளோம். மேலும், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இங்கு பணியாற்றுபவர்களுக்கு இந்தக் காலகட்டம் முடிந்தவுடன் அரசிடம் பேசி நிரந்தரமாக பணியாற்றவும் முயற்சி செய்வேன்.

கொரோனா வைரஸ் சிகிச்சை

முதல் அலையைவிட இது அதிக வீரியமாக இருக்கிறது. நம்மை நாம்தான் தற்காத்துக் கொள்ளவேண்டும். இரண்டு மாஸ்குகளை போடவேண்டும். முடிந்தளவுக்கு வீட்டில் இருந்து வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3wp660l
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*