குமரி: ஒரே நாளில் 7 அடி உயர்ந்த அணை; குளங்கள் உடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

0

அரபிக்கடலில் ஏற்பட்ட டவ்தே புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன் மழை தொடங்கியது. இப்போது யாஸ் புயல் காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி மைலாடி பகுதியில் அதிகபட்சமாக 236.2 மி.மீ மழை பெய்தது. இரணியலில் 192 மி.மீ, கொட்டாரம் 167 மி.மீ என பெரும்பாலான இடங்களில் நூறு மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 138.86 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் அனைத்து குளங்களும் நிரம்பின. மணவாளக்குறிச்சி பெரிய குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மற்றும் மரச்சீனி கிழங்கு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் வாழைகள் வேரோடு சாய்ந்தன. மேலும் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

புத்தேரி குளம் உடைந்ததால் வடசேரி சக்திகார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

ஏ.வி.எம் சானலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளச்சல், மரமடி பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. குறும்பனை, இரும்பிலி பகுதியில் கனமழையால் நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஈத்தாமொழியை அடுத்த பொழிக்கரை மீனவ கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தால் உணவு பொருட்கள் சேதமடைந்தன. புத்தேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நாகர்கோவில் மாநகரத்தின் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்புக்களில் தண்ணீர் புகுந்தது.

நேற்று இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் உடைந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவில் இருந்தே மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார இணைப்புகள் சரியாக இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் தண்ணீர் மட்டம் 44.95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உள்ளது. வினாடிக்கு 11300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 70.50 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு 6525 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் சிற்றார் -1 மற்றும் சிற்றார் -2 அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இதனால் தாமிரபரணி ஆற்றிலும், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகரத்துக்கு தண்ணீர் வழங்கும் முக்கடல் அணை மொத்தம் 25 அடி கொள்ளளவு கொண்டது. நேற்றைய நிலவரப்படி அணையில் தண்ணீர் 15.8 அடியாக இருந்து. நேற்று இரவு பெய்த கனமழையால் இன்று 23 அடியாக தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. சுமார் 7 அடிக்கு மேல் ஒரே இரவில் தண்ணீர் உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை வெளுத்து வாங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oSwkGj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*