ஊரடங்கு காலத்தில் நெல்லை மாநகரப் பகுதிகளில் மது பாட்டில்கள் விற்கப்படுவதைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாநகரின் மையப்பகுதியான உடையார்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனால் அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டதுடன் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் சிலரையும் போலீஸார் கைது செய்தார்கள்.
நெல்லை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியிலும் வாகன சோதனையிலும் ஈடுபட்டதால் கஞ்சா விற்பனை செய்துவந்த கும்பலால் கஞ்சா விற்க முடியவில்லை. தங்களுடைய தொழில் முடங்குவதற்கு பொதுமக்களே காரணம் என்பதால் கஞ்சா விற்பனைக் கும்பல் பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் அரிவாளுடன் ஊருக்குள் நடமாடியுள்ளனர்.
நெல்லை உடையார்பட்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் கஞ்சா விற்பனைக் கும்பல் அரிவாளுடன் வந்து பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் அவரது நண்பர்களுடன் மூவருடன் சேர்ந்து கையில் அரிவாளுடன் சாலையில் சுற்றி வந்து மிரட்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
அரிவாளுடன் சுற்றிய ரெளடிக் கும்பல், சாலையில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளை அரிவாள் கொண்டு வெட்டுவது போல ஓடியதால் அஞ்சி நடுங்கி பதற்றத்துடன் வேகமாக வாகனத்தில் சென்றார்கள். சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவரை அந்த கும்பல்மிரட்டியதால் அவர் பதற்றத்துடன் கைக்கிளில் இருந்து இறங்கி சைக்கிளை தள்ளியபடியே ஓடினார்.
ரவுடிகள் அட்டகாசம் குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததால் போலீஸார் விரைந்து சென்றனர்.போலீஸாரின் வாகனத்தைக் கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோடியது. அவர்களில் வெள்ளப்பாண்டி என்பவர் பிடிபட்டார். அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், தப்பியோடிய மதன் உள்ளிட்ட மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.
ரவுடிகள் அரிவாளுடன் சாலையில் சுற்றித்திரிந்து பொதுமக்களை மிரட்டும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bFkslB
via
