கரூர் மாவட்டப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் செல்லும்போதே பிரசர வலி எடுத்ததால், பாதி வழியில் நிறுத்தி, மருத்துவ உதவியாளர் பெண் ஆம்புலன்ஸிலேயே வைத்து அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் வடிவேலன். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி மீனா(24). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், 4-வது முறையாக மீனா கர்ப்பம் அடைந்தார்.
Also Read: கரூர்: `அரசு சொல்றத கேளுங்க!' - ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் நடந்த காதல் திருமணம்
நிறைமாத கர்ப்பிணியான அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மீனாவின் வசிப்பிடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் மீனா ஏற்றப்பட்டு, வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அதனால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, மீனாவை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, மீனாவிற்கு பிரசவ வலி அதிகமானது. `இன்னும் கொஞ்ச தூரம்தான்... வலியைப் பொறுத்துக்குங்க' என்று 108 ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் ரம்யா கூறியிருக்கிறார். ஆனாலும், கடுமையான பிரசவ வலியால் மீனா துடித்திருக்கிறார். இதனால், நிலைமையை புரிந்துகொண்ட ஆம்புலன்ஸ் பைலட் முகேஷ் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர், மருத்துவ உதவியாளர் ரம்யா, மீனாவிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வைத்து பிரசவம் பார்த்தார்.
அப்போது, மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும் சேயும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு, பாதி வழியிலேயே பிரசவ வலி எடுத்ததால், மருத்துவ உதவியாளர் அவருக்குப் பிரசவம் பார்த்த சம்பவம், அந்தப் பெண்ணின் உறவினர்களை நெகிழ வைத்திருக்கிறது. அதோடு, பிரசவத்தை சிறப்பாக பார்த்து தாயையும், சேயையும் நலமாகப் பிரித்தெடுத்த மருத்துவ உதவியாளருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2R00ZoE
via
