நெல்லை: `கொரோனா மரணத்தின் வலி எனக்குத் தெரியும்!’ - ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவலர்

0

உலகையே புரட்டிப் போட்ட கொரோனாவின் பாதிப்பு தற்போது தமிழகத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்தபடியே இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவ உதவிக்காக ஏராளமானோர் காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

நெல்லை அரசு மருத்துவமனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள், பொது நிலையினர் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அரசின் கோரிக்கையை ஏற்று மனிதாபிமானம் கொண்ட தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். காவல்துறையின சார்பாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த காவலரான சொர்ண மகாராஜா தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை அரசின் நிவாரண உதவித் தொகைக்கு வழங்கியுள்ளார்.

மனிதாபிமானம் மிகுந்த காவலர் சொர்ண மகாராஜா

நெல்லையில் உளவுத்துறை காவலராக இருக்கும் சொர்ண மகாராஜாவின் இந்த மனிதாபிமானச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. இது குறித்து அவரிடம் பேசியபோது, ”கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் பலர் அதில் இருந்து மீண்டு வந்த போதிலும் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றன. என்னுடைய நெருங்கிய உறவினரின் கணவர் சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

அவருக்கு எவ்வளவோ சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாமல் மரணத்தைத் தழுவினார். அது என் மனதை மிகவும் பாதித்தது. அவர் சிகிச்சை பெற்றபோது, ஏராளமான மக்கள் தங்கள் உறவுகளை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு மருத்துவமனை வாயிலில் கண்ணீரும் கவலையுமாக நிற்பதை நேரில் பார்த்தேன்.

ஒரு குடும்பத் தலைவர் இறந்து விட்டால் அந்தக் குடும்பமே நிலைகுலைந்து அடுத்து என்ன செய்வது என்பதே புரியாத நிலைக்குத் தள்ளப்படும் அவலத்தை நேரில் கண்டேன். அந்தப் பாதிப்பு என் மனதில் ஆறாத வலியை ஏற்படுத்தியது. அதனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் தமிழக அரசின் நிவாரண உதவித் தொகைக்கு எனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினேன். அதற்கு என் மனைவி மற்றும் பெற்றோர் ஒத்துழைப்புக் கொடுத்தது மனநிறைவாக இருக்கிறது” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oHOr1p
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*