மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்துள்ள பதில் மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2015-ல் பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியால் தமிழகம் உட்பட ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், ஹிமாசல்பிரதேசம், அஸ்ஸாம் என 5 மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது.
ஆனால், 2018-ல்தான் மதுரை தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 27.01.2029-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இடம் தேர்வு செய்ய மத்திய 3 ஆண்டுகளையும், தேர்வு செய்த பின்பு அடிக்கல் நாட்ட ஓராண்டையும் மத்திய மாநில அரசுகள் வீணடித்தனர். அடிக்கல் நாட்டி 2 ஆண்டுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.
அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டியே 27 மாதங்கள் முடிவடைந்து விட்டன.
அடிக்கல் நாட்டிய செங்கல் அப்படியே இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை காட்டி தேர்தல் பிரசாரம் செய்தது பரபரப்பான நிலையில், செங்கலை திருடி விட்டதாக அதிமுகவினரால் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது தனிக்கதை.
2015-ல் அறிவித்தபோதே கட்டுமானப் பணிகள் தொடங்கியிருந்தால், இந்த கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க தென் மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
குஜராத்தில் 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ராஜ்கோட்டில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டபடி 2020-ல் மாணவர் சேர்க்கை தொடங்கி, நிரந்தர கட்டட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ''மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் 26.03.21-ல் இந்திய- ஜப்பான் அரசுகளுக்கிடையே கையெழுத்தானது. கடன் தொகை 22.788 பில்லியன் ஜப்பானிஷ் யென் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1,536.91 கோடி ஆகும்.
தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு ரூ. 1,264 கோடி. திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளதால் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், மருத்துவமனை கட்டுவதற்கு டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது'' என்று பதில் அளித்துள்ளனர்.
இதைப்பற்றி நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ ஆர்வலர் பாண்டியராஜா, "கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. டெண்டர் பணிகள் விரைவில் முடித்து கட்டுமான நிறுவனத்தை விரைவில் முடிவு செய்து, பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். 750 படுக்கை வசதியுடன் கூடிய மதுரை எய்ம்ஸில் 100 எம்பிபிஎஸ் இடங்களும் 60 நர்சிங் இடங்களும் வர இருப்பதால், மத்திய மாநில அரசுகள் உடனடியாக தற்காலிக கட்டடங்களை தேர்வு செய்து மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்' என்றார்.
எப்படியோ, கொரோனா மக்களை அச்சுறுத்திக் கொப்டிருக்கும் சூழலில் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் பணிகள் தொடங்க வேண்டுமென்பதே தென்மாவட்ட மக்களின் விருப்பமாகும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3y675Vc
via
