இராமநாதபுரம்: `கொரோனா வார்டில் உணவு தரவில்லை!’ - நோயாளியின் கடிதமும் மருத்துவமனையின் விளக்கமும்

0

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் 'மரண வாக்குமூலம்' என்ற பெயரில் எழுதியுள்ள கடிதம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளியின் கடிதம்

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் பாதிக்கப்படுவோர், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மரணங்களும் தொடர்கிறது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட கலெக்டரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை, மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லை, உணவுகள் சரியான நேரத்துக்கு கொடுப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ்

இந்நிலையில் அங்கு சிகிச்சையிலுள்ள யோகேஸ்வரன் என்பவர் 'மரண வாக்குமூலம்' என்று தலைப்பிட்டு கடிதம் எழுதி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

அக்கடிதத்தில் "கொரோனாவினால் பாதிக்கப்பட்டு நானும் என் பெற்றோரும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 2 நாட்களாக சாப்பாடு தரவில்லை. இதை மருத்துவர்களிடம், கண்காணிப்பாளரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அலட்சியமாக நடந்து கொல்கிறார்கள். கொரோனா தொற்றினால் இறப்பதைவிட பசி பட்டினியால் இறந்து விடுவோம் என்பது உறுதியாகிவிட்டது. அதுபோல் இங்கு சுகாதார கேடும் அதிகமாக உள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்களை காப்பாற்ற வேண்டும் " என்று தெரிவித்துள்ளவர்,

கொரோனா நோயாளியின் கடிதம்

என் உயிருக்கு எவ்வித ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் முறையற்ற செயல்பாடுதான் காரணம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு சம்பந்தமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டீன் அல்லியிடம் பேசினோம், "மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவர்கள், பணியாளர்களும் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள். மூன்று வேளை சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் உள்ளது. ஒரு சில நோயாளிகள் தவறாக தகவல் பரப்புகிறார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களிடம் சண்டை போடுகிறார்கள். இவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.

உணவு புகார் சம்பந்தமாக நேற்று ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இன்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்வதாக தகவல் வந்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ybQyiq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*