தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா குழுமத்தின் அங்கமான தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அப்போது திடீரென கலவரம் ஏற்பட்டது.
போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து மே 28-ம் தேதி ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது முந்தைய எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் பட்டவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், போராட்டக்காரர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடமிருந்தும் பிரமாணப் பத்திரங்கள் பெறப்பட்டன. தூத்துக்குடி அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2018, ஜூன் 4-ம் தேதி முதல் விசாரணையைத் துவக்கியது ஆணையம். முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசம், 6 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
ஆணையத்தின் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்டுக் கொள்ளப்பட்டதால் பின்னர், கடந்த 2020 பிப்ரவரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதம் விசாரணை தடைபட்டது. பின்னர், கடந்த சில மாதமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் குறித்து 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், போராட்டக்குழுவினர், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் என 719 பேர், ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர். காவல்துறையினர், அப்போதைய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் வசித்த ஊழியர்கள், ஆலை நிர்வாகத்தினர் என பலரையும் விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த மாதம் வரும் 17-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை, துப்பாக்கிச்சூட்டின் போது பணியில் இருந்த காவலர்கள், கலவரத்தில் காயம்பட்ட காவலர்கள் என 45 பேரை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முந்தைய விசாரணையின் போதே``எஞ்சியுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியிருந்தார். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், ``இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை உடனடியாக பொதவெளியில் வெளியிட வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், ``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திய மக்கள் பேரணியில் 13 அப்பாவி உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. அந்த சம்பவம் குறித்து விசாரணை செய்திட தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது. அச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு முன்னர், அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்த்தோம்.
இரண்டாம் ஆண்டும் காத்திருந்தோம், சமர்ப்பிக்கப்படவில்லை. வரும் 22-ம் தேதியுடன் மூன்றாம் ஆண்டை எட்டும் நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றவுடன்தான் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே விசாரணை செய்தால் எப்படி முழு விசாரணையை முடிக்க முடியும்? இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை மட்டுமே விசாரணை செய்துள்ளது ஆணையம். அரசு அதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர், துப்பாக்கிச்சூட்டை நடத்திய போலீஸார் என 300-க்கும் மேற்பட்டோரை விசாரணை செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கலவரம் தொடர்பாக 2017-ல் அமைக்கப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட, `நீதியரசர் ராஜேஸ்வரன் விசாரணை அறிக்கை'யை பொதுவெளியில் வெளியிடுமாறு பல சமூக அமைப்புகள் வலியுறுத்தியும் இன்றுவரை வெளியிடப்படவில்லை. அதற்கு முன்பாக 2013-ல் தாதுமணல் கொள்ளை தொடர்பாக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் குழுவின் அறிக்கை, 2014-ல் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ரூ.1,11,000 கோடி முறைகேட்டை கண்டறிந்த, மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் ஐ.ஏ.எஸ்., குழுவின் அறிக்கை 2015 நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டும் வெளிடப்படவில்லை.
இந்தக் குழுக்கள் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை. அவற்றின் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எல்லாவற்றையும்விட மிக முக்கியமான அறிக்கை, இந்த துப்பாக்கிச்சூட்டைப் பற்றிய அறிக்கைதான். ``ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்காது, அதற்கு தி.மு.க அரசு அனுமதிக்காது” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதேபோல, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். அதனால், தாமதிக்காமல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை இடைக்கால அறிக்கைகை பொது வெளியில் வெளியிட வேண்டும் என மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QgdITy
via
