கொரானா ஊரடங்கின்போது ஆதரவற்றவர்கள், முதியோர் உள்ளிட்டோர் பயனடையும் வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல்துறை, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து `பசிக்கிறதா எடுத்துக்கொள்ளுங்கள்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதற்காக கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் உணவுக் குடில் அமைக்கப்பட்டு உணவுப் பொருள்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு வைக்க விரும்பும் தாராள மனம் கொண்டவர்கள் தங்கள் வீட்டில் சமைத்த அல்லது கடையில் வாங்கிய உணவு பார்சல்களை வைத்துச் செல்லலாம். பசியுடன் இருக்கும் நபர்கள் அவற்றை எடுத்துப் பசியாறும் வகையிலான இந்தப் புதுமையான திட்டத்தை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் இன்று தொடங்கி வைத்தார்.
உணவுக் குடிலைத் திறந்து வைத்துப் பேசிய தென்காசி மாவட்ட எஸ்.பி சுகுணா சிங், ``ஊரடங்குக் காலத்தில் கடையநல்லூரில் புதியதொரு முயற்சியாக ஏழை எளிய மக்கள், பசித்தோர் இலவசமாகச் சாப்பிடும் விதத்தில் உணவுக் குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையினருடன் தன்னார்வ அமைப்பினர் மேற்கொண்ட முயற்சியால் இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளிலும் இலவசமாக உணவு பார்சல்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீரும் வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை வீணாக்கி விடாமல், தேவைக்கு ஏற்ப எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த உணவுக் குடில் திட்டம் ஊரடங்கு முடிந்த பிறகும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என இதில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் உறுதி அளித்திருக்கிறார்கள். அதனால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி இங்கு வந்து உணவு பார்சல்களை எடுத்துக் கொள்ளலாம்.
மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதனால் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வீடுகளிலேயே இருக்க வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. தேவையின்றி வெளியில் சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, சேகர், வன உயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சினேக் ஷேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ueG5zt
via
