அமெரிக்காவிலிருந்து ப்ளான்; திருவாரூரில் விபத்து! -சந்தானத்தின் உறவுக்கார பெண் மரணத்தில் அதிர்ச்சி

0

பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஜெயபாரதி. இவர் திருவாரூர் மாவட்டம் கடாரம் கொண்டானில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த இவர், தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் இங்குள்ள வீட்டில் வசித்து வந்தார். தபால் துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய ஜெயபாரதி, கடந்த மே 21-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை வீடு திரும்பும்போது கார் மோதி உயிரிழந்ததாக, இவரது பெற்றோருக்கு காவல்துறையினரிடமிருந்து அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஆனால், இவரது பெற்றோர், தங்களது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்கள். இவ்வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், ஜெயபாரதி, கார் மோதி மரணம் அடையவில்லை. இது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது.

சரக்கு வாகனம்

திருவாரூர் அருகே தப்பாளம்புலியூரில் சாலை விபத்தில் ஜெயபாரதி உயிரிழந்ததாக முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இவரது பெற்றோர்களோ, அமெரிக்காவில் வசிக்கும் ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷின் தூண்டுதலால் தங்களது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்கள். இந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். சி.சி.டி.வி கேமிராக்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஜெயபாரதியை ஒரு சரக்கு வாகனம் தொடர்ச்சியாக கண்காணித்ததும், தப்பாளம்புலியூர் சாலை அருகே ஜெயபாரதி சென்று கொண்டிருந்தபோது, கொலையாளிகள், இவர் மீது அந்த வாகனத்தை மோதி, கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது திருவாரூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசிக்கும் இவரது கணவர் விஷ்ணு பிரகாஷூம் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து மோதல்கள் இருந்து வந்திருக்கிறது. ஜெயபாரதியை விவகாரத்து செய்ய, விஷ்ணு பிரகாஷ் முயன்றிருக்கிறார், ஆனால் இதற்கு ஜெயபாரதி சட்டப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதோடு, விஷ்ணு பிரகாஷ் குறித்து அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு ஜெயபாரதி, ஒரு புகார் அனுப்பியிருக்கிறார், இதனால் விஷ்ணு பிரகாஷ் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஜெயபாரதியின் மீது விஷ்ணு பிரகாஷ் கடும் கோபமடைந்து, இவரை கொலை செய்யும் முடிவிற்கு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்தபடியே தனது உறவினர்களான ஜெகன், ராஜா, செந்தில்குமார் மூலம் ஜெயபாரதியை தீர்த்துக்கட்ட விஷ்ணு பிரகாஷ் பிளான் போட்டுள்ளார்.

ஜெயபாரதியின் மீது வாகனத்தை மோதி, உயிரிழக்க செய்தால், இது விபத்து வழக்காக முடிந்துவிடும் என திட்டமிட்டு, பழைய சரக்கு வாகனத்தை 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். பிரசன்னா என்பவர் இந்த வாகனத்தை ஓட்டியிருக்கிறார். ஜெயபாரதியை ஒருநாள் முழுவதும் பின் தொடர்ந்து கண்காணித்திருக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெயபாரதி அஞ்சலகத்தில் பணி முடித்து, மாலை தனது இருசக்கர வாகனத்தில் விடு திரும்பிக் கொண்டிந்தபோது, அவர் மீது சரக்கு வாகனத்தை மோதியதோடு, மிக கொடூரமாக, அங்கிருந்த பணை மரத்தோடு உடலை நசுக்கி, சிதைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்கள். இந்த கொலையில் மிக முக்கிய பங்கு வகித்த, சரக்கு வாகன உரிமையாளர் செந்தில்குமார், ஓட்டுநர் பிரசன்னா ஆகியோரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தார்கள்.

விபத்து

இக்கொலைக்கு உடந்தையாக இருந்த விஷ்ணு பிரகாஷின் உறவினர்களான ராஜா, ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, இவர்களை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஜெயபிரகாஷ், கொலையாளிகளுக்கு பல லட்சம் ரூபாய் பணம் அனுப்பியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து, விஷ்ணு பிரகாஷை கைது செய்து இங்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். கொலை செய்யப்பட்ட ஜெயபாரதி, பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவினர் என்பதால், இந்த கொலை சம்பவம் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படுவதோடு, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fz6e6E
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*