``20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு!" - வரவேற்பைப் பெறும் மதுரை கமிஷனரின் முயற்சி

0

கொரோனா என்னும் இந்தப் பெரும் நோய்த்தொற்று மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நோயால் பலர் தங்கள் குடும்ப உறவுகளை இழந்து வாடுகின்றனர். பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துத்தான் பணிபுரிந்துவருகின்றனர். அந்த வகையில், காவல்துறையினரின் குடும்பத்தினர் அது குறித்துக் கலங்க, காவல்துறையினரோ தங்கள் பணியில் சமசரமின்றிச் செயல்பட்டு வருகிறார்கள்.

நோய்த்தொற்றைக் குறைக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அரசுடன் இணைந்து காவல்துறை மக்களைக் கண்காணிப்பது, மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பது, நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட தங்களது பணிகளை மிகவும் நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள். இந்தப் பேரிடரிலும் 24 மணி நேரமும் காவல்துறை தங்களது சேவையை இடையறாது வழங்கி வருகிறார்கள்.

பிரேம் ஆனந்த் சின்ஹா

இன்னொரு பக்கம், இந்த கொரோனா நோய்த்தொற்றுக் கால இடைவிடா பணிச்சுமையால், அவர்களுக்கு மன உளைச்சல், உடல் சோர்வு, உடல் ரீதியான பிரச்னை, நோய்த்தொற்று பரவும் அபாயம் எனப் பல தொந்தரவுகள் வரும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனது உடல்நிலையை விட, தன்னால் தன் குடும்ப நபர்களுக்கு நோய்த்தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தால் அவர்கள் மன உளைச்சலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்தச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, மதுரை காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பல்வேறு பிரிவுகள் காவல் துறையில் உள்ளன. அனைத்துப் பிரிவுகளில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அனைத்துக் காவலர்களின் பணிச் சுமையைக் குறைப்பதற்கு, சுழற்சி முறையில் 20% காவலர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு கூறுகையில், ``கொரோனா காலக்கட்டத்தில் மட்டுமல்லாது அனைத்துச் சூழ்நிலைகளிலும் தொடர்ந்து வேலையில் இருக்கும் எங்களுக்கு இந்த ஓய்வானது மன நிம்மதியை அளிக்கும் வகையில் உள்ளது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அவர்கள் பகுதி நேரமாக வேலைக்கு வர உத்தரவு அளிக்கப்பட்டு உள்ளது.

காவலர்கள்

மேலும், இதற்கு முன்னர் 10% என்றிருந்த சுழற்சி விடுமுறையை, இப்போது 20% என்று உயர்த்தி, அது உயர் அதிகாரிகளிலிருந்து ஆயுதப்படை காவலர்கள் வரை அனைவருக்கும் ஒரே விதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் காவல் பணியில் உள்ள அனைவரும் தங்கள் உடல் நிலையைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்'' என்றார். காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா எடுத்துள்ள நடவடிக்கைகள் காவலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RLVR7W
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*